பா.ஜ.க. தமிழக தலைவர் அண்ணாமலை, 'என் மண்; என் மக்கள்’ என்ற பெயரில் இன்று இராமேஸ்வரத்தில் இருந்து நடைபயணத்தைத் துவங்க இருக்கிறார். இந்த நடைப்பயணத்தை இன்று மாலை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைக்க உள்ளார். இந்த விழாவில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ், தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்ட பலரும் கலந்துகொள்ள உள்ளனர்.
அண்ணாமலை பேரணியின் தொடக்க விழாவில் பங்கேற்க அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுத்து இருந்த நிலையில், அவர் மருத்து காரணங்களால் இன்றைய நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை என நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் அண்ணாமலை தெரிவித்தார். இதன் காரணமாக அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்துகொள்வார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் அரசு மேல்நிலைப்பள்ளியின் பவள விழாவை முன்னிட்டு முன்னாள் மாணவர்கள் சந்திப்பு மற்றும் முதல் நாள் விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் முன்னாள் மாணவரும், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான சீமான் பங்கேற்றார். அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய சீமான், “ஜெயலலிதா இறப்புக்குப் பிறகு நான்கு ஆண்டுகள் அ.தி.மு.க ஆட்சி நடைபெற்றது. அதில், அ.தி.மு.க கட்சியில் இருந்த முன்னாள் அமைச்சர்கள் 7 பேர் மீது சி.பி.ஐ. வழக்குகள் இருக்கிறது. அவர்கள் மீதும் ஊழல் குற்றச்சாட்டு உள்ளது. ஆனால், அ.தி.மு.க.வின் சொத்து பட்டியலை மட்டும் அண்ணாமலை ஏன் வெளியிடவில்லை.
நடுநிலைமையோடும், நேர்மையோடும் இருந்து இரண்டு தரப்பு பட்டியலையும் அவர் வெளியிட வேண்டும். ஆனால், அதை மறைத்து அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்களை புனிதத் தன்மையும், நேர்மையானவர்கள் போல் காட்ட முயற்சி செய்கின்றனர். அ.தி.மு.க. கட்சியோடு கூட்டணி வைத்திருப்பதால் தான் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்கள் மீது இருக்கின்ற குற்றச்சாட்டுக்களை அண்ணாமலை கூற மறுக்கிறார். அரசியல் லாபத்திற்காக இதுபோன்று செயலை அவர் செய்து வருகிறார். ராமேஸ்வரத்திலிருந்து நடைபயணம் செல்லும் அண்ணாமலைக்கு பிரஷர், சுகர் வேண்டுமானாலும் குறையலாம். ஆனால், அவர் என்னதான் நடையா நடந்தாலும் எதுவும் நடக்கப்போவதில்லை” என்று கூறினார்.