
விஜய், நடிப்பதைத் தாண்டி தனது விஜய் மக்கள் இயக்கம் மூலமாகப் பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார். மேலும் அரசியலிலும் ஆர்வம் காட்டி வருகிறார். அந்த வகையில் நேற்று (17ம் தேதி) தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவ மாணவிகளை நேரில் சந்தித்து ஊக்கத்தொகை மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார்.
இந்த கல்வி விருது விழா நிகழ்வு நீலாங்கரையில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்ற நிலையில், மேடையில் பேசிய விஜய் மாணவர்களின் எதிர்காலம் குறித்தும் கல்வி குறித்தும் பல விஷயங்களைப் பகிர்ந்திருந்தார். அப்போது மேடையில் பேசிய அவர், "எல்லா தலைவர்களைப் பற்றியும் தெரிந்து கொள்ளுங்கள். அம்பேத்கர், பெரியார், காமராஜர் போன்றோர்களைப் படிங்க. நல்ல நல்ல விஷயங்களைத் தெரிஞ்சுக்கங்க. ஓட்டுக்கு காசு வாங்கக் கூடாது. இதை பெற்றோரிடம் நீங்க சொல்லுங்கள்" எனப் பேசியிருந்தார்.
விஜய்யின் இந்தப் பேச்சுக்கு பலரும் பாராட்டு தெரிவித்தனர். அந்தவகையில் நேற்று நாம் தமிழர் கட்சி நிகழ்ச்சி தென்காசி மாவட்டம், செங்கோட்டையில் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துகொண்டார்.

இந்நிகழ்ச்சியின் போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “நான் பேசுவதைத் தான் தம்பி பேசியிருக்கிறார். எனவே அது எனக்குத்தான் வலிமை சேர்க்கும். அவர் பேசியது ஞாயமான கருத்து அதனை யார் பேசினாலும் ஏற்றுக்கொள்ள வேண்டும். வாக்குக்கு பணம் கொடுப்பதில் தான் ஊழல் மற்றும் லஞ்சத்திற்கான விதை ஊன்றப்படுகிறது. நடிகர் விஜய் குறிப்பிட்ட தலைவர்களையும் படிக்கவேண்டும். அவர்களை தாண்டி பல தலைவர்களையும் படிக்கவேண்டும்.
அதிமுக, திமுகவை பிடிக்காதவர்கள் நடிகர் விஜய்க்கு ஓட்டளிக்க முன்வருவார்கள். என் ஓட்டை நடிகர் விஜயால் பிரிக்க முடியாது. நடிகர் ஒருவர் அரசியலுக்கு வந்தால் அவரது ரசிகர்கள், அவர் மீது ஈர்ப்பு கொண்டவர்கள் தான் ஓட்டளிப்பார்கள். கொள்கை, கோட்பாட்டை பார்த்து தான் மற்றவர்கள் அவருடன் கைக்கோர்ப்பார்கள்.
நடிகர் விஜய் அரசியலுக்கு வந்து அவர்களின் வாக்கை பிரிப்பார். இவர்களின் வாக்கை பிரிப்பார் என நாம் கூறிவிட முடியாது. இந்தியாவில் எத்தனையோ மாநிலங்கள் உள்ளன. ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் தான் திரைப்படத்தில் நடிப்பதே நாடாள தகுதி என்ற நிலை உள்ளது. எனது கொள்கை என்பது நடிகர்கள் அரசியலுக்கு வரக்கூடாது என்பது தான். ஏனென்றால் மொழி, இனம், நிலவள பாதுகாப்புக்காக போராடும் தகுதியானவர்கள் எடுபடாமல் போய்விடுகின்றனர்'' என்றார்.