நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர்,
நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை எனவும், தமிழகத்தின் தண்ணீர் பிரச்சினையை யார் தீர்ப்பார்களோ? அவர்களை ஆராய்ந்து வாக்களியுங்கள் என ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் தனது தொண்டர்களுக்கு கூறியுள்ளார். தண்ணீர் பிரச்சினையை யார் தீர்ப்பார்கள் என்று ரஜினிகாந்த் தான் தொண்டர்களுக்கு சொல்ல வேண்டும். தொண்டர்களே ஆராய்வதற்கு தலைவன் எதற்கு?.
தலைவன் தான் தொண்டர்களுக்கு வழிகாட்ட வேண்டும். ஆனால் அந்த வழி இல்லாதது ஒரு கேள்வியாக எழுகிறது. சட்டமன்ற தேர்தலில் ரஜினிகாந்த் போட்டியிடட்டும். அப்போது அவர் வந்து தீர்ப்பாரா? என்று பார்ப்போம். போர் வந்தால் பார்த்துக்கொள்ளலாம் என ரஜினிகாந்த் கூறினார். தற்போது எல்லையில் போர் வருகிற சூழல் ஏற்பட்டுள்ளது. அங்கு ரஜினிகாந்த் செல்லட்டும்.
நடிகர் கமல்ஹாசனின் முடிவு என்ன என்பது தெளிவாக இல்லை. அ.தி.மு.க., தி.மு.க.விற்கு வாக்களிக்க வேண்டாம் என கமல்ஹாசன் கூறியதை வரவேற்கிறோம். தமிழக அரசு ரூ.2 ஆயிரம் வழங்க இருக்கும் திட்டம் தேர்தலுக்காக தான். நேரடியாக கொடுக்க முடியாது என்பதால் மறைமுகமாக கொடுக்க உள்ளனர். இவ்வாறு கூறினார்.