
நிலத் தகராறு தொடர்பாக ஒரு பட்டியலின குடும்பத்தை 20க்கும் மேற்பட்டவர்கள் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம், ராம்கர் பகுதியைச் சேர்ந்த முகேஷ் குமார் ஜாதவ். இவர் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவர். இவர், தனியாக சொந்த நிலம் இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், முகேஷ் குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் தங்களது நிலத்தில் கடுகு அறுவடை செய்து கொண்டிருந்தனர்.
அப்போது, இந்த நிலம் தங்களக்கு சொந்தம் என்று கூறி மாற்று சமூகத்தைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்டோர், முகேஷ் குமார் மற்றும் அவரது குடும்பத்தினரை அடிக்கத் தொடங்கியுள்ளனர். மேலும், குச்சி மற்றும் கூர்மையான ஆயுதங்களைக் கொண்டு கடுமையாக அவர்களை தாக்கியுள்ளனர். இதில் முகேஷ் குமாரின் குடும்பத்தினர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டியலின குடும்பத்தை 20க்கும் மேற்பட்டோர் தாக்கியது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.