
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் முதல் ஆண்டை நிறைவு செய்து கடந்த பிப்ரவரி 2ஆம் தேதியோடு 2ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இதற்கிடையே, வரப்போகிற 2026ஆம் சட்டமன்றத் தேர்தலையொட்டி விஜய், பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறார். அதன்படி, அண்மையில் ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி புதிய மாவட்டச் செயலாளர்களை விஜய் நியமித்தார்.
அதே சமயம் த.வெ.க தலைவர் விஜய்யுடன் பிரபல அரசியல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் திடீர் சந்திப்பு ஒன்றை நடத்தியிருந்தார். இந்த சந்திப்பின் போது 2026 சட்டமன்றத் தேர்தல் குறித்து ஆலோசனை நடைபெற்றது.
இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் முதலாவது ஆண்டுவிழா மாமல்லபுரம் அருகே வரும் 26ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு தமிழகத்தில் இருந்து பல பேர், விஜய்யை பார்க்க வருவதால் அதிக அளவில் கூட்டம் கூடும் என்பதற்காக, சுமார் 2,000 பேருக்கு மட்டும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மாவட்ட வாரியாக குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டுமே பாஸ் வழங்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. தவெக பொதுச் செயலாளர் ஆனந்த், இன்று முதல் மாவட்டச் செயலாளர்களுக்கு அனுமதி சீட்டு வழங்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.