முதலமைச்சரின் வெளிநாட்டு பயணம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை ஒன்றி வெளியிட்டுள்ளார்.
அதில், “கள்ளச் சாராயம் மற்றும் விஷச் சாராய மரணங்கள், கனிம வளக் கடத்தலைத் தடுக்கும் அதிகாரிகள் கொல்லப்படுதல் போன்ற சட்டம்-ஒழுங்கு பிரச்சனைகளில் இருந்து தப்பிக்கவும், ஒவ்வொரு நாளும் தூங்கி எழும்போது அமைச்சர்களின் விதண்டாவாத பேச்சுக்கள் மற்றும் திமுக நிர்வாகிகளின் அடாத செயல்பாடுகளால் தூக்கம் கெட்டுவிடுவதாகக் கூறிய திமுக அரசின் முதலமைச்சர் ஸ்டாலின், இதிலிருந்து தப்பிக்க சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு குடும்பத்துடன் சுற்றுலா சென்று வந்த நிலையில், இந்தச் சுற்றுலாவின் மூலம் 3,233 கோடி முதலீட்டினை ஈர்த்ததாக சென்னை விமான நிலையத்தில் பேட்டி அளித்து புளகாங்கிதம் அடைந்துள்ளார்.
பத்திரிகைகளில் 9 நாள் சிங்கப்பூர்-ஜப்பான் பயணத்தில், முதலில் 1,258 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன என்று செய்திகள் வந்தது; பின்னர் 3,233 கோடி என்று வந்தது. மேலும் இதில், மிட்சுபிஷி நிறுவனத்துடன் 1,891 கோடி ரூபாய்க்கு சென்னையிலேயே ஒப்பந்தம் கையெழுத்தானது என்றும் கூறியுள்ளார். அப்போது, உண்மையில் வெளிநாடுகளுக்குச் சென்று திரட்டிய முதலீடு 1,342 கோடிதான். இதில் எது உண்மை? எதை நம்புவது ? திமுக அரசின் முதலமைச்சருடைய பேட்டியைப் பார்க்கும்போது, 'கேப்பையில் நெய் வடிகிறதென்றால், கேட்பாருக்கு புத்தி எங்கே போயிற்று' என்ற பழமொழிதான் நினைவுக்கு வருகிறது.
முதலமைச்சர் ஒப்பந்தம் மேற்கொண்ட கொமாட்சு நிறுவனம் 2005 லேயே ஜெயலலிதாவால் தமிழகத்திற்கு கொண்டு வரப்பட்டது. அவர்களது CEOக்களை அழைத்து அவர்களிடமே முதலீடுகளை பெற்றிருக்கலாம். அதை விடுத்து சிங்கப்பூர் ஜப்பான் வரை சென்றதை தோல்வி என்கிறோம். 2019-ஆம் ஆண்டு நானும், சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்கள் மற்றும் துறை அதிகாரிகள் மட்டும் இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் துபாய் ஆகிய நாடுகளுக்குச் சென்றோம்.
எனது வெளிநாட்டுப் பயணத்தின் மூலம் 41 நிறுவனங்களின் 8 ஆயிரத்து 835 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான முதலீடுகளை ஈர்த்து, 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நபர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. எனது தலைமையிலான அரசு பேரிடர் காலத்திலேயே சுமார் 60 ஆயிரம் கோடிக்கு மேலாக முதலீடுகளை ஈர்த்து வந்து சாதனை புரிந்தது. அதிலும் குறிப்பாக, 2020-ல் ஒரே நேரத்தில் டாடா, ஒலா போன்ற நிறுவனங்களிடமிருந்து மட்டும் சுமார் 15 ஆயிரம் கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டன. குறிப்பாக, கார் தயாரிப்பிற்கு தேவைப்படும் முக்கிய மூலப் பொருளான செமி கண்டக்டர் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை ஒன்றை இந்திய வெளிநாட்டு - (ஃபாக்ஸ்கான்) கூட்டு நிறுவனம் சுமார் 1.54 லட்சம் கோடி முதலீட்டில் தமிழகத்தில் துவக்க இருந்த நிலையில், அந்நிறுவனம் கோரிய நிலம் மற்றும் மானியம் வழங்க, இந்த திமுக அரசு மறுத்ததன் காரணமாக, 25 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கக்கூடிய இத்தொழிற்சாலை தற்போது குஜராத்திற்கு சென்றுவிட்டது. இவ்வாறு தமிழகத்திற்கு வரும் முதலீடுகளை இழந்தால், 2030-ல் தமிழ் நாட்டின் பொருளாதாரத்தை 1 ட்ரில்லியள் அளவுக்கு உயர்த்துவோம் என்று கூறியது வெறும் வாய்ச்சவடால் தானே.
அதேபோல் ஃபாக்ஸ்கான் நிறுவனம் 4 ஆயிரம் கோடி முதலீட்டில் 20 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் தொடங்க இருந்த ஆப்பிள் தொழிற்சாலை திமுக அரசின் பாராமுகத்தால் கர்நாடகத்திற்கு சென்றுவிட்டது. தமிழகத்தில் முதலீடு செய்யத் தயாராக இருந்த நிறுவனங்களை, வேறு மாநிலங்களுக்கு அனுப்பி தாரை வார்த்துவிட்டு, துபாய் மற்றும் சிங்கப்பூர், ஜப்பான் ஆகிய வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்று 6 ஆயிரம் கோடி மற்றும் 3 ஆயிரம் கோடி என்று சுமார் 9 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டை ஈர்த்ததற்கு, தன் முதுகை தானே தட்டிக்கொள்ளும் திராவிட மாடல் முதலமைச்சரின் வாய்ச் சவடால் திறமையை தமிழக மக்கள், குறிப்பாக இளைஞர்கள் நன்கு அறிந்துள்ளனர்” என கூறியுள்ளார்.