நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழகம் மற்றும் புதுவையில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதனையொட்டி தமிழக அரசியல் கட்சிகள் கூட்டணி அமைத்து தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்து வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டு வந்தன. இதனைத் தொடர்ந்து தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் கடந்த 20ம் தேதி துவங்கி 27ம் தேதி வரை நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதன் காரணமாக நேற்று தமிழ்நாட்டில் பல்வேறு தொகுதிகளிலும் முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் தங்கள் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்தனர்.
அந்த வகையில், விருதுநகர் தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் சி. கவுசிக் என்பவர் நேற்று விருதுநகர் ஆட்சியர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தார். வேட்புமனு தாக்கல் செய்யும்போது ஆட்சியர், வேட்பாளர் கவுசிக்கை உறுதிமொழி படிவத்தை வாசிக்க சொன்னார். ஆனால் தனக்கு தமிழ் தெரியாது என்று வேட்பாளர் கவுசிக் கூற, அதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் வாசிக்க அதனை கவுசிக் பின்தொடர்ந்து உறுதிமொழி ஏற்றுக் கொண்டுள்ளார்.
தென்காசி மாவட்டம் மேலக்கலங்கலைச் சேர்ந்த மருத்துவரான கவுசிக். நாம் தமிழர் கட்சியின் மருத்துவர் பாசறையின் மாவட்டச் செயலாளராக உள்ளார். இந்த நிலையில் இந்த தேர்தலில் விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். கவுசிக்கின் பெற்றோர்கள் வட மாநிலத்தில் வசித்து வருகின்றனர். அதனால் கவுசிக்கும் அங்கேயே படித்ததால் அவருக்கு தமிழ் பேச மட்டுமே தெரியும்; வாசிக்க தெரியாது என்று கூறப்படுகிறது.