சசிகலாவை வரவேற்று பேனர் வைத்ததற்காக, திருநெல்வேலி மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர் சுப்ரமணியராஜா, அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டார். சசிகலாவுக்கு ஆதரவாகப் போஸ்டர்கள் ஒட்டியவர்கள் மீதும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தியதாக, மயிலாடுதுறை, திருச்சி மற்றும் தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர்களை, அடிப்படை உறுப்பினர் உட்பட, அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளனர். சசிகலா காரில் அதிமுக கொடி வைத்திருந்ததால், சேலம் மாநகரக் காவல் ஆணையரிடம் அதிமுக நிர்வாகிகள் புகார் அளித்ததும் நடந்திருக்கிறது.
இந்நிலையில், ‘நீங்க என்ன நடவடிக்கை எடுத்தாலும் சரி.. நாங்க சசிகலா ஆதரவு நிலையில் உறுதியாக இருக்கிறோம்..’ என்பதை வெளிப்படுத்தும் விதமாக, விருதுநகரிலும், அம்மாவட்டத்தில் உள்ள செந்நெல்குடியைச் சேர்ந்த அதிமுக தொண்டர்கள் நால்வர், ‘தொண்டர்களைக் காக்க வரும் தியாகத் தலைவியே! வருக தாயே!’ என்று போஸ்டர் அடித்து ஒட்டியிருக்கின்றனர். அந்தப் போஸ்டர்களில் தங்களது அதிமுக அடையாள அட்டை விபரங்களையும் அச்சிட்டுள்ளனர். மேலும் அதிமுக பொதுச் செயலாளர் சின்னம்மா என்றும், அடிமட்டத் தொண்டரும் முதல்வராகலாம் என்ற நிலையை உருவாக்கியவர் என்றும் சசிகலா புகழ் பாடியதோடு, எடப்பாடி பழனிசாமிக்கும் ‘செக்’ வைத்துள்ளனர்.
சசிகலா ஆதரவு போஸ்டர் ஒட்டி கலக்கத்தை ஏற்படுத்துபவர்கள் மீது, நீக்க நடவடிக்கை தொடரும்போல.