சசிகலா சிறையில் இருந்துள்ளதால் அடுத்து 6 ஆண்டுகளுக்குத் தேர்தலில் போட்டியிட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. 2027 வரை இந்த தடை தொடரும் என்பதால், அதனை சட்ட ரீதியாக உடைக்க அவரது ஆதரவாளர்கள் தீவிரமாக களமிறங்கியுள்ளனர்.
சிக்கிம் மாநிலத்தில் அமைச்சராக இருந்த பிரேம்சிங் தமாங், ஊழல் வழக்கு தொடர்பாக சிறையில் இருந்தார். 2018ஆம் ஆண்டு சிறை தண்டனை முடிந்து வெளியே வந்த அவர், 6 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட முடியாது என்று கூறப்பட்டது. இருப்பினும் அவர் தேர்தல் ஆணையத்தில், தேர்தலில் போட்டியிட விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என்று மனு அளித்திருந்தார். இதனைப் பரிசீலனை செய்த தேர்தல் ஆணையம் அவருக்கு சலுகை வழங்கியது. இதனால் அவர் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு முதலமைச்சரானார்.
இதுபோன்ற சலுகையை சசிகலாவுக்கும் பெற்றுவிட வேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள் தீவிரமாக உள்ளனர். இதற்காக அவரது வழக்கறிஞர்கள், சட்ட நிபுணர்கள் ஆகியோருடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். இந்த ஆலோசனையில் சில முடிவுகளை எடுத்து தேர்தல் ஆணையத்தில் சசிகலா தரப்பில் மனு அளிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.