அமைச்சர் உதயநிதியின் மகளுக்கு சட்டமன்றத்தில் பிறந்தநாள் வாழ்த்து சொல்வது அடிமைத்தனம் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.
நேற்று சட்டப்பேரவையில் பேசியிருந்த தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று பிறந்தநாள் கொண்டாடிய அமைச்சர் தங்கம் தென்னரசுவிற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்திருந்தார். அதே நேரம் தன்னுடைய மகளுக்கும் இன்று தான் பிறந்தநாள் எனக் குறிப்பிட்டிருந்தார். அதனைக் கேட்ட சபாநாயகர் அப்பாவு இருவருக்கும் பிறந்தநாள் வாழ்த்துகள் என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ''அது என்ன தர்பார் மன்றமா? மன்னர்கள் நடத்தும் மன்னராட்சி தர்பார் மன்றமா? அது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அமைப்பு. சட்டமன்றத்தில் மக்கள் பிரதிநிதிக்கு பிறந்தநாள் என்றால் சபாநாயகர் வாழ்த்து தெரிவிக்கலாம். இன்றைய தினம் எம்எல்ஏ ஒருவர் பிறந்தநாள் கொண்டாடுகிறார் அவருக்கு என்னுடைய வாழ்த்துகள் என்று சொல்லலாம். அது சரியான விஷயம். அதேபோல் அமைச்சர் தங்கம் தென்னரசுவிற்கு பிறந்தநாள் என்றால் வாழ்த்து சொன்னது சரி. ஆனால், உதயநிதியின் பெண்ணிற்கு பிறந்தநாள் என்றால் அவருக்கு வாழ்த்து சொல்வது சரியா? அதுவும் அவரது மகள் மாடத்திலிருந்து பார்த்துக் கொண்டிருக்கிறார். எல்லோரும் மாடத்தை பார்த்து எல்லோரும் கும்பிடுகிறார்கள். எப்படிப்பட்ட கொத்தடிமைகள் பாருங்கள். எப்படிப்பட்ட கொத்தடிமைகள் அமைச்சர்களாக இருக்கிறார்கள் என்பதற்கு இதைவிட ஒரு உதாரணம் இருக்காது'' என்று கடுமையாக விமர்சித்தார்.