தமிழக தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் பதவியில் இருந்து எம்.மணிகண்டன் 07.08.2019 புதன்கிழமை நீக்கப்பட்டார்.ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் அன்று காலை செய்தியாளர்களை சந்தித்த அவர், கேபிள் கட்டணம் குறைப்பு பற்றி முதல்வர் தன்னிடம் எந்தவித ஆலோசனையும் நடத்தவில்லை என்று தெரிவித்திருப்பதும், கால்நடை அமைச்சர் மற்றும் கேபிள் டி.வி.கார்ப்பரேசன் சேர்மனுமான உடுமலை ராதாகிருஷ்ணனை குற்றம் சாட்டி பேசியதும் தான் அமைச்சர் பதவியில் இருந்து அவர் நீக்கப்பட்டதாக அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது.
மேலும் உடுமலை ராதாகிருஷ்ணனை கேபிள் டி.வி.கார்ப்பரேசன் சேர்மன் பதவியில் அமர வைத்தது குறித்து எடப்பாடிக்கும், மணிகண்டனுக்கும் பிரச்னை ஏற்பட்டது தான் பெரிய காரணமாக சொல்லப்பட்டது. இதையடுத்து நேற்று மதுரையில் இருந்து சென்னைக்குக் கிளம்பிய மணிகண்டன் முதல்வரை சந்திக்கப்போவதில்லை எனக் கூறினார். மேலும் சென்னை வந்தவுடன் துணை முதல்வர் ஓபிஎஸ்-ஐ சந்தித்துள்ளார். இருவரும் அரை மணி நேரத்திற்கு மேலாக பேசியதாக சொல்லப்படுகிறது. மணிகண்டன் சொல்லிய அனைத்துப் புகார்களையும் கேட்டுக்கொண்ட ஓபிஎஸ் அவருக்கு ஆதரவாக எந்த பதிலையும் கொடுக்காததால் மணிகண்டன் கடுப்பில் சென்றதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். இதே போல் அதிமுகவில் பல்வேறு நிர்வாகிகள் உட்கட்சி பூசலால் அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்படுகிறது.