Skip to main content

சரத்குமார், ராதிகா தேர்தலில் போட்டியிடவில்லை!

Published on 15/03/2021 | Edited on 15/03/2021

 


சென்னை டி. நகரில் உள்ள அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், தமிழக சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் தலைமையிலான கூட்டணியில் சமத்துவ மக்கள் கட்சியின் சார்பில் போட்டியிடும் 37 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் நிறுவனத் தலைவரும், பொதுச் செயலாளருமான சரத்குமார் வெளியிட்டார். வேட்பாளர் பட்டியல் வெளியானதும், கட்சி அலுவலகத்திற்கு வெளியே கட்சித் தொண்டர்கள் பட்டாசு வெடித்துக் கொண்டாடினர். 

 

அதன்படி, தூத்துக்குடி- சுந்தர், மதுரை (தெற்கு)- ஈஸ்வரன், ராஜபாளையம்- விவேகானந்தன், சிவகங்கை- நேசம் ஜோசப், வாணியம்பாடி- ஞானதாஸ், விளாத்திகுளம்- வில்சன், முதுகுளத்தூர்- நவபன்னீர்செல்வம், சங்ககிரி- செங்கோடன், தென்காசி- தங்கராஜ், பத்மநாபபுரம்- ஜெயராஜ், அம்பாசமுத்திரம்- கணேசன், வாசுதேவநல்லூர் (தனி)- சின்னசாமி, அந்தியூர்- குருநாதன், ஆத்தூர் (தனி)- சிவா, விருதுநகர்- மணிமாறன், திருநெல்வேலி- அழகேசன், திருச்செந்தூர்- ஜெயந்திகுமார், கிருஷ்ணராயபுரம் (தனி)- சரவணன், பெரியகுளம் (தனி) அரசுப்பாண்டி, கிள்ளியூர்- ஆண்டனி, உத்திரமேரூர்- சூசையப்பர், விளவங்கோடு- அருள்மணி, கடலூர்- ஆனந்தராஜ், ஆலங்குளம்- செல்வக்குமார், திருச்செங்கோடு - குட்டி (எ) ஜனகராஜ், ராதாபுரம்- உத்திரலிங்கம், நாங்குநேரி- சார்லஸ் ராஜ், ஆம்பூர்- ராஜா, ஜோலார்பேட்டை- கருணாநிதி, போளூர்- கலாவதி, உளுந்தூர்பேட்டை- சின்னையன், ரிஷிவந்தியம்- சண்முகசுந்தரம், லால்குடி- முரளி கிருஷ்ணன், சிதம்பரம்- தேவசகாயம், சீர்காழி (தனி)- பிரபு, திருத்துறைப்பூண்டி (தனி)- பாரிவேந்தன், துறைமுகம்- கிச்சா ரமேஷ் ஆகியோர் சமத்துவ மக்கள் கட்சியின் சார்பில் போட்டியிடுகின்றனர். இந்த வேட்பாளர் பட்டியலில் கட்சியின் தலைவர் சரத்குமார், ராதிகா பெயர் இடம்பெறவில்லை.

 

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த சரத்குமார், "சமத்துவ மக்கள் கட்சி வேட்பாளர்கள் அனைவரும் அவர்களின் உழைப்பு, சேவையின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். களத்தில் உள்ள வேட்பாளர்கள் அனைவரும் வெற்றி வாகை சூட வைக்க தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட வேண்டியுள்ளது. அதனால், நானும் என் மனைவியும், முதன்மைத் துணைப் பொதுச் செயலாளருமான ராதிகாவும் தேர்தலில் போட்டியிடவில்லை" என்றார்.

 

மக்கள் நீதி மய்யம் தலைமையிலான கூட்டணியில் சமத்துவ மக்கள் கட்சிக்கு 40 சட்டமன்றத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், பின்னர் கூட்டணியில் தமிழ்நாடு இளைஞர் கட்சி இணைந்தது. இதனால், சமத்துவ மக்கள் கட்சியிடம் இருந்து 3 சட்டமன்றத் தொகுதிகள் திரும்பப் பெறப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

 

இதனிடையே, தமிழக சட்டமன்றத் தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சிக்குப் பொதுச் சின்னம் ஒதுக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் அக்கட்சி மனுத் தாக்கல் செய்துள்ளது.  

 

 

சார்ந்த செய்திகள்