
தேசிய கல்விக் கொள்கையை ஏற்றால்தான் தமிழகத்திற்கு நிதி வழங்கப்படும் என்றும், தேசிய கல்விக் கொள்கையை ஏற்காத பட்சத்தில் 2,000 கோடி ரூபாயைத் தரச் சட்டத்தில் இடம் இல்லை என்றும் மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் திட்டவட்டமாகத் தெரிவித்திருந்தார். இவரது பேச்சுக்கு தமிழக அரசியல் தலைவர்கள், கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
அதே நேரத்தில், மும்மொழிக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிப்பு, யுஜிசி புதிய விதி, புதிய கல்விக்கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் சென்னையில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணிக் கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி (18-02-25) அன்று சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திமுக கூட்டணிக் கட்சி தலைவர்கள் இதில் கலந்து கொண்டனர். சென்னையில் திமுக சுற்றுச்சூழல் அணியின் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதனை தி.மு.க. சுற்றுச் சூழல் அணியின் மாநில துணைச் செயலாளர் பழ.செல்வகுமார் தலைமையேற்று நடத்தினார். நிகழ்வில் “பாஜக தலைவர் கர்நாடகத்தில் வேலை செய்தார் அதனால் அவருக்கு இந்தி கற்றுக் கொள்ள வேண்டிய தேவை ஏற்பட்டது. தமிழிசை தெலங்கானாவில் ஆளுநராக இருந்தார் அதனால அவருக்கு இந்தி தேவைப்பட்டது. வேலை நிமித்தமாக வட இந்தியாவிற்கு போகும் போது கற்றுக் கொள்ள வேண்டிய தேவை ஏற்பட்டால் கற்றுக் கொள்ளப் போகிறார்கள். அதை விட்டு விட்டு இந்தி கட்டாயம் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற மும்மொழிக் கொள்கை என்பது திணிப்பு ஆகும். அதனால் புதிய கல்விக் கொள்கையை நாம் கண்டிப்பாக எதிர்க்க வேண்டும்” என்றார்.