
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சி மாநாட்டைத் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளில் இறங்கி வருகிறது. அண்மையில் தொடர்ச்சியாக ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி புதிய மாவட்டச் செயலாளர்களை விஜய் நியமித்து வருகிறார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் இருந்து விலகிய ஆதவ் அர்ஜுனா மற்றும் அதிமுகவில் இருந்து விலகிய சிடிஆர் நிர்மல்குமார் ஆகியோருக்கு தவெக கட்சியில் முக்கிய பொறுப்புகள் வழங்கப்பட்டது.
கடந்தாண்டு நடைபெற்ற தவெக மாநாட்டின் போது, கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு தரப்படும் என்று விஜய் கூறியிருந்தார். ஆனாலும், இதுவரை எந்தவித கட்சியும் அதிகாரப்பூர்வமாக தவெகவுக்கு ஆதரவு தரவில்லை. இதற்கிடையே, தமிழ்நாடு முஸ்லீம் லீக் கட்சியின் நிறுவன தலைவர் முஸ்தபா, தவெக பொதுச் செயலாளர் ஆனந்த் மற்றும் நிர்வாகிகளைச் சந்தித்து தவெக தலைமையிலான கட்சிக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியானது.
இந்த நிலையில், தவெகவுடன் கூட்டணி தொடர்பான தகவல்கள் உண்மையில்லை என்று தமிழ்நாடு முஸ்லீம் லீக் கட்சியின் நிறுவனத் தலைவர் முஸ்தபா தெரிவித்துள்ளார். இது குறித்து முஸ்தபா வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது, ‘நேற்று த.வெ.க தலைவரும், நடிகருமான அன்பு சகோதரர் விஜய்யை நேரில் சந்தித்து அரசியல் களத்திற்கு வந்ததற்காக வாழ்த்துகளை தெரிவித்தோம். அவரும் உங்களது இயக்கம் எங்களுக்கு ஆதரவு தரவேண்டும் என கோரிக்கை வைத்தார், தேர்தல் நேரத்தில் அதுபற்றி கட்சியினரோடு கலந்தாலோசித்து முடிவெடுப்பதாக கூறினோம்.
மேலும் சமூகவலைதளங்களில் கூட்டணி தொடர்பாக வரும் தகவல்கள் எதுவும் உண்மையில்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த நல்லதொரு சந்திப்பினை ஏற்பாடு செய்து கொடுத்த சகோதரர் ஆதவ் அர்ஜுனாவுக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.