தமிழகம் முழுவதும் போதைப் பொருட்கள் கடத்தலை தடுக்க அ.தி.மு.க. சார்பில் மாவட்டத் தலை நகரங்களில் இன்று (04.03.2024) ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இது குறித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று (03-03-24) தனது எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் போதைப்பொருள் புழக்கம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்தத் தவறிய தி.மு.க. அரசைக் கண்டித்தும் நாளை அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் அ.தி.மு.க. சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும்.
நாளைய போராட்டத்தோடு நிச்சயமாக இது நின்றுவிடப் போவதில்லை. தமிழ்நாட்டில் கடைசித் துளி போதைப்பொருள் ஒழியும் வரை எங்களுடைய போராட்டம் தொடரும். பெற்றோர்களே, இந்த ஆட்சியில் தமிழ்நாடு போதைப்பொருள் கிடங்காக மாறி வருகிறது. நம் பிள்ளைகளை நாம் தான் பார்த்துக் கொள்ளவேண்டும். கவனமாக இருங்கள். மாணவச் செல்வங்களே, இளைய சமுதாயமே, உங்கள் எதிர்காலம் மிக முக்கியம். ஒரு சிறிய தவறு கூட பெரிய தண்டனைகளை பெற்றுத் தந்துவிடும்” எனக் குறிப்பிட்டார். மேலும் இது தொடர்பாக ஆங்கில மொழிபெயர்ப்புடன் கூடிய 4 நிமிடம் 53 வினாடிகள் கொண்ட காணொளி ஒன்றையும் வெளியிட்டார்.
இந்த நிலையில், திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி இன்று (04-03-24) செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர், “அரசியலில் ஏற்பட்டுள்ள நெருக்கடியை கையாள முடியாமல் திமுக அரசு மீது எடப்பாடி பழனிசாமி பழிபோடுகிறார். திமுக அரசை அனைத்து தரப்பினரும் பாராட்டுவதை தாங்கிக் கொள்ள முடியாமல் பழனிசாமி போராட்டம் நடத்துகிறார். இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக தமிழ்நாடு திகழ்வதை எடப்பாடியால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
இந்தியாவிலேயே அதிகமாக போதைப்பொருள் கைப்பற்றப்பட்ட மாநிலம் குஜராத். திமுக ஆட்சியில் போதைப்பொருள் விற்பனை அதிகரித்து இருப்பது போல் எடப்பாடி பேசுவது வேடிக்கையாக உள்ளது. அதிமுக ஆட்சியில் தான் டிஜிபியாக இருந்த டி.கே.ராஜேந்திரன் உள்ளிட்டோர் மீது குட்கா வழக்கு தொடரப்பட்டது. யாரோ ஒருவர் செய்ததற்காக ஒட்டுமொத்த திமுகவையும் குறை சொல்லக்கூடாது. அதிமுக ஆட்சியில் எத்தனை பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டனர். அந்த வழக்கில் சிக்கியவர்கள் மீது கூட அதிமுக ஆட்சியில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ஆனால், திமுக ஆட்சியில் தவறு செய்தவர்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
போதைப்பொருள் விற்பனையில் ஐ.டி நிறுவன பணியாளர்கள் ஈடுபடுவதாக அபாண்டமான குற்றச்சாட்டை எடப்பாடி பழனிசாமி கூறுகிறார். ஐ.டி பணியாளர்களை இழிவுபடுத்தும் வகையில் பழனிசாமி பேசியிருக்கிறார். ஐ.டி பணியாளர்களை இழிவுபடுத்தி பேசியதற்காக பழனிசாமி மன்னிப்பு கேட்க வேண்டும், இல்லாவிட்டால் வழக்கு தொடரப்படும். போதைப்பொருள் வழக்கில் 12 ஆண்டு சிறை தண்டனை பெற்றவரையே அமித்ஷா, பா.ஜ.கவில் சேர்த்துள்ளார். தமிழ்நாட்டில் அதிக போதைப்பொருள் இருப்பது போன்ற தவறான எண்ணத்தை உருவாக்க முயற்சி செய்து வருகின்றனர். தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க எப்போதும் திமுக தயாராக உள்ளது. எடப்பாடி பழனிசாமி 2 நாள்களுக்குள் மன்னிப்பு கேட்காவிட்டால் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறினார்.