
அண்மை காலமாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும், அக்கட்சியின் மூத்த தலைவர் செங்கோட்டையனுக்கு இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. தொடர்ந்து, எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் பங்கேற்காத செங்கோட்டையன் இ.பி.எஸ்.ஸை சந்திப்பதையே புறக்கணித்து வந்தார். இது சொந்த கட்சியினரையே கடும் அதிருப்திக்கு உள்ளாக்கியது.
இந்த நிலையில்தான் கடந்த சில நாட்களுக்கு முன்பு அதிமுக அலுவலகம் திறப்பதற்காக டெல்லி சென்ற எடப்பாடி பழனிசாமி, திடீரென மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்துப் பேசியிருந்தார். “தமிழக பிரச்சனை தொடர்பாக பேசினோம்..” என்று எடப்பாடி பழனிசாமியே கூறி இருந்தாலும், திரைமறைவில் அதிமுக - பாஜக இடையே கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடந்ததாகவே அரசியல் விமர்சகர்கள் கணிக்கின்றனர்.
இந்த பரபரப்பு அடங்குவதற்குள், செங்கோட்டையன் திடீரென டெல்லிக்கு சென்று மத்திய அமைச்சர்களை பார்த்து வந்தது அரசியல் களத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஆனால், டெல்லி பயணம் குறித்தோ இ.பி.எஸ் குறித்தோ செங்கோட்டையன் இதுவரை வாய் திறக்காமல் மௌனமாகவே இருந்து வருகிறார். இந்த நிலையில் நேற்று சென்னை செல்வதற்காக ஈரோடு ரயில் நிலையம் வந்த செங்கோட்டையனிடம் செய்தியாளர்கள், “தொடர்ச்சியாக நீங்கள் மௌனமாகவே இருப்பதற்கான காரணம் என்ன?” எனக் கேள்வி எழுப்பினர். அதற்கு செங்கோட்டையன், “மௌனம் அனைத்தும் நன்மைக்கே” என ஒரே வரியில் பதிலளித்துவிட்டு சென்றார்.
இதுகுறித்து இன்று மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த செல்லூர் ராஜுவிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு, “அதிமுக கட்சியில் மூத்த நிர்வாகி, பெரிதும் மதிக்கக்கூடியவர் அண்ணன் செங்கோட்டையன். பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் அவரை மதிக்கக்கூடியவர்; எங்கள் ஆட்சியில் செங்கோட்டையனை முக்கிய துறையான பள்ளிக்கல்வித்துறைக்கு அமைச்சராக்கி அழகுபார்த்தவர் எடப்பாடி பழனிசாமி. இந்த நிலையில் அவரது கருத்தை அவர் முன் வைத்திருக்கிறார்.
எடப்பாடி பழனிசாமியிடம் சொல்லிவிட்டு செங்கோட்டையன் டெல்லிக்குச் சென்றாரா? என்பது பற்றி எனக்கு தெரியாது. அதைப்பற்றி அவரிடமே கேளுங்கள். அதிமுக குறித்து கற்பனைகளை பரப்ப வேண்டாம்; எங்கள் கட்சிகளை பற்றி மட்டுமே பேசும் நீங்கள் தமிழகத்தில் இருக்கும் பிற கட்சிகளையும் பற்றியும் பேசுங்கள். அதிமுக ஒற்றுமையாக இருக்கிறது. கட்சியில் இருந்து ஓரிருவர் வெளியேறுவது வழக்கமான ஒன்றுதான். ஒரு தலைவர் வெளியேறுகிறார் என்றால் அவர் பின்னால் இருக்கும் சிலர் போகத்தான் செய்வார்கள். அதனால் கட்சிக்கு எந்த பாதிப்பு வராது” என்றார்.