மதுரை மாவட்டம் வலையங்குளத்தில் 'அதிமுக பொன்விழா எழுச்சி மாநாடு' எனத் தலைப்பிடப்பட்ட அதிமுக மாநாடு கடந்த 20 ஆம் தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. 51 அடி உயரம் கொண்ட கொடிக் கம்பத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிமுக கொடியை ஏற்றி மாநாட்டை தொடங்கி வைத்தார். இந்த மாநாட்டில் திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட மொத்தமாக 32 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
அதேநேரம் மாநாட்டிற்கு வரும் தொண்டர்களுக்காக மூன்று நாட்களுக்கு முன்பாகவே உணவு தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வந்தது. ஏ, பி, சி என மூன்று கவுண்டர்களில் உணவுகள் சமைக்கப்பட்டது. இதற்கான வெங்காயம் உரித்தல் மற்றும் காய்கறிகளை வெட்டுதல் உள்ளிட்ட பணிகளுக்காக அக்கம்பக்கம் உள்ள கிராமங்களைச் சேர்ந்த பெண்மணிகள் வந்திருந்தனர். இப்படி தடபுடலாக ஏற்பாடுகள் நடைபெற்ற நிலையில், மாநாட்டில் உணவு டன் கணக்கில் சமையல் கூடத்திலேயே கீழே கொட்டப்பட்ட நிகழ்வு உண்மையிலேயே பலருக்கு அதிருப்தியை ஏற்படுத்தி இருந்தது. அதே சமயம் உணவு சமைத்த ஒப்பந்ததாரரோ, சாம்பார் சாதம் சூடாக கிடைத்ததால் மாநாட்டுக்கு வந்தவர்கள் அதைமட்டும் சாப்பிட்டுவிட்டு புளியோதரையை விரும்பி சாப்பிடவில்லை. காலையில் பாத்திரங்களை எடுக்க வந்தபோது இவ்வளவு உணவு கீழே கொட்டப்பட்டு கிடந்தது எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மதுரை விமான நிலையத்தில் இருந்து விமானம் மூலம் சென்னை செல்வதற்காக இன்று மதுரை விமான நிலையத்திற்கு வந்திருந்தார். அப்போது அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். இந்த செய்தியாளர் சந்திப்பின் போது செய்தியாளர்கள் மதுரையில் நடைபெற்ற அதிமுகவின் மாநாடு குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு ஓ.பன்னீர்செல்வம், “அதிமுக மாநாட்டில் புளியோதரை எப்படி இருந்ததோ, அதுபோலத்தான் அந்த மாநாடும் இருந்தது” என தெரிவித்தார்.