ஈரோடு தெற்கு மாவட்ட தி.மு.க அலுவலகத்தில் வழக்கறிஞர்கள் ஆலோசனை மையத்தை தி.மு.க.வின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி 13ஆம் தேதி திறந்து வைத்தார். பிறகு, அங்கு நடந்த கூட்டத்தில் அவர் பேசுகையில், “பீகார் தேர்தலில் முதன்முறையாக 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் தபால் மூலம் ஒட்டளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இது ஆபத்தானது.
அவர்கள்தான் வாக்களித்தார்கள் என்பதை உறுதி செய்யமுடியாது. இதேபோல், மாற்றுத் திறனாளிகள் வாக்களிக்கும் விதிமுறைகளை மாற்றியிருக்கின்றனர். கடந்த தேர்தல்களைவிட இம்முறை வேறு விதமாக இருக்கும். பல வாக்காளர்களை திட்டமிட்டு நீக்கி இருக்கிறார்கள். சென்னை காவலர் குடியிருப்பில் 581 ஓட்டுக்களை நீக்க மனு அளித்தும் நீக்கவில்லை.
கடந்த முறை 10 தொகுதிகள் 500க்கும் குறைவான ஓட்டுகளில் தோற்றுள்ளோம். பெயர் நீக்கம் சரிவர நடைபெற்றுள்ளதா? என்பதைக் கட்சியினர் சரிபார்க்க வேண்டும். வாக்குச்சாவடி அமைப்பதிலும் மோசடி நடந்துள்ளது. மார்ச் முதல் வாரத்துக்குள் தேர்தல் தேதி அறிவிக்கப்படும். 80 வயதுக்காரர்களை கண்காணித்து அடையாளப்படுத்த வேண்டும். தேர்தலுக்குப் பின் 20 நாட்கள் வரை ஓட்டுப் பெட்டி உள்ள அறையைக் கண்காணிக்க வேண்டும்.
ஆட்சி மாற்றம் ஏற்படும் என்பதால் அதிகாரிகள் தி.மு.க.வினருடன் நெருங்கி வருகின்றனர். தமிழக ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் நடுநிலையோடு நடக்கிறார்கள். அரசியல்வாதிகளைவிட அவர்கள் புத்திசாலிகள். வேலுமணி, தங்கமணி எல்லாம் மணியில் ஓட்டிக் கொண்டுள்ளனர். இதனை எதிர் கொள்ளும் சக்தி வழக்கறிஞர்கள் பிரிவுக்கு உண்டு. வரும் தேர்தலில் 180 தொகுதிக்கு மேல் தி.மு.க வெற்றிபெறும் என கருத்துக் கணிப்பு வருகிறது. அதற்காக ஓவர் கான்ஃபிடன்ட்டாக இருக்கக்கூடாது.
லோக்சபா தேர்தல் வெற்றியைக் கருத்தில் கொள்ளக்கூடாது. சட்டசபைத் தேர்தல் என்பது வேறு. தேர்தல் பணிகளுக்கு 54 நாட்கள்தான் உள்ளது. பல பிரச்சனைகள் உள்ளன. இந்த முறை தேர்தலை அணுகுவதற்கு வழக்கறிஞர்கள் அணி இருந்தால்தான் உதவியாக இருக்க முடியும் என்பதை உணர்ந்த தலைவர் மு.க.ஸ்டாலின், அனைத்து மாவட்டத்திலும் வழக்கறிஞர் ஆலோசனை மையம் அமைக்கப்படும் என உறுதி அளித்தார். அந்த வகையில் வழக்கறிஞர் ஆலோசனை மையம் சேலம், ஈரோடு, திருப்பூர், கோவையில் திறக்கப்பட்டுள்ளது. வழக்கறிஞர்கள் பிரிவு, தி.மு.க.வினருக்கு அரணாகவும் பாதுகாப்பாகவும் இருக்க வேண்டும்" என்றார்.