ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், நேரடியாக அதிமுக வேட்பாளரை நிறுத்தவுள்ளதாகக் கூறி வேட்பாளர்களிடம் விருப்ப மனுக்களை எடப்பாடி பழனிசாமி தரப்பு பெற்று வருகிறது. இது ஒருபுறம் இருக்க, நாங்களும் அதிமுக சார்பில் போட்டியிடுகிறோம் என்று பாஜக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார் பன்னீர்செல்வம்.
இந்நிலையில், தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவைத் தலைவர் தனியரசு ஓ.பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளார். அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த தனியரசு, “தேர்தல் குறித்து அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு என்னை தொடர்புகொண்டு பேசினார்கள். அப்போது நானே சென்னை வந்து உங்களை சந்திக்கிறேன் என்று கூறியிருந்தேன். அதன் காரணமாகவே தற்போது அவரை வந்து சந்தித்திருக்கிறேன். தேர்தலில் திமுக கூட்டணி வலுவாக உள்ளது. ஆனால் அதிமுக கூட்டணியில் ஒற்றுமை இல்லாமல் இருக்கிறது.
இடைத்தேர்தலில் பன்னீர்செல்வமும், பழனிசாமியும் தனித்தனியாக வேட்பாளரை நிறுத்துவேன் என்று சொல்லியிருக்கிறார்கள். இந்த போக்கு சரியானதாக இல்லை. அதனால் ஓ.பன்னீர்செல்வம் அதிமுகவை வலிமைப்படுத்தி இடைத்தேர்தலை சந்திக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டு எங்களின் ஆதரவை தெரிவித்துள்ளோம். ஓ.பன்னீர்செல்வத்தை தவிர்த்துவிட்டு எடப்பாடி பழனிசாமியால் அதிமுகவை வெற்றி பெறச் செய்ய முடியாது. அதிமுக ஒன்றுபட்டு தேர்தலை சந்திக்கவில்லை என்றாலும், அல்லது ஓ.பி.எஸ், தினகரன், சசிகலா ஆகியோரை நிராகரித்துவிட்டு களத்திற்குச் சென்றால் அதிமுகவின் பாரம்பரிய வாக்குகளே அதிமுகவிற்கு விழாது” என்றார்.