ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் எஸ்டிபிஐ தொண்டர்கள் சாலை மறியல் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ஈரோடு கிழக்கு தொகுதி ராஜாஜி புரம் பகுதியில் உள்ள காமராஜ் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி எதிரே எஸ்டிபிஐ தொண்டர்கள், இன்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது சம்பந்தமாக எஸ்டிபிஐ மாவட்ட தலைவர் லுக்மான் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “இப்பள்ளியில் ஆறு வாக்குச் சாவடிகள் உள்ளன. ஏராளமான இஸ்லாமியர்கள் வாக்களிக்க வந்துள்ளனர். ஆனால் ஒவ்வொரு வாக்காளரும் சுமார் வெகு நேரம் காத்திருந்து வாக்களிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. வயது முதிர்ந்தவர்களுக்கு முன்னுரிமை அளித்து வாக்களிக்க அனுமதிப்பார்கள் அதையும் அனுமதிக்கவில்லை.
வயதானவர்களுக்கு குடிதண்ணீர் மற்றும் சக்கர நாற்காலி போன்ற வசதி எதுவும் இந்த பூத்தில் இல்லை. இது குறித்து கேட்டால், அதிகாரிகள் முறையாக பதில் அளிக்கவில்லை. பத்திரிகையாளர்கள் வருவதற்கு கூட இந்த பள்ளியில் அனுமதி இல்லை. சுமார் 70 வயது மதிக்கத்தக்க சோபியா என்ற வயது முதிர்ந்த முஸ்லிம் பெண்மணி, பல மணி நேரம் காத்திருந்ததால் மயக்கம் அடைந்தார். இதேபோன்று பல முதியவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். நிழலுக்காக பள்ளி வளாகத்தில் முதியவர்கள் இருந்தால் கூட அவர்களை போலீசார் துரத்துகின்றனர். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் குறிப்பாக இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் பகுதியில் இதுபோன்று வாக்காளர்கள் புறக்கணிக்கப்படுகின்றனர். ஒன்றிய அரசை இதற்காக குற்றம் சாட்டுகிறோம்” என்றார்.
சாலை மறியல் செய்யப்பட்டதால் அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டனர். போலீஸ் அதிகாரிகளுக்கும் சாலை மறியல் செய்தவர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர் பத்திரிகையாளர்கள் வாக்குச்சாவடி உள்ள பள்ளிக்குள் நுழைவதற்கும் அதிகாரிகள் தடுத்துள்ளனர். தேர்தல் ஆணையம் வழங்கிய அடையாள அட்டையை பத்திரிகையாளர்கள் காண்பித்தும் இவ்வாறு போலீசார் அனுமதி மறுத்துள்ளனர். தொடர்ந்து பத்திரிகையாளர்கள் சாலை மறியல் செய்வதாகக் கூறியதால் பின்னர் கூடுதல் எஸ்பி ஜானகிராமன் அவர்களை சமாதானப்படுத்தி பள்ளிக்குள் செல்ல அனுமதித்தார்.