குடியரசு தின அலங்கார ஊர்தி தமிழகத்தில் காட்சிப்படுத்தப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் ஒவ்வொரு வருடமும் நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பில் மாநிலங்களின் அலங்கார ஊர்திகள் இடம் பெறும். இதில், அந்தந்த மாநிலங்களின் சிறப்பை வெளிப்படுத்தும் வகையில் அலங்கார ஊர்திகள் அமைந்திருக்கும். அந்தவகையில் இந்தாண்டுக்கான அலங்கார ஊர்தியை தமிழ்நாடு அரசு உருவாக்கியிருந்தது. ஆனால், மத்திய அரசு நிராகரித்திருக்கிறது.
தென் மாநிலங்களில் கர்நாடகாவைத் தவிர மற்ற அனைத்து மாநில அலங்கார ஊர்திகளும் நிராகரிக்கப்பட்டுள்ளன. அதேபோல், மேற்குவங்க மாநிலத்தின் அலங்கார ஊர்தியும் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமருக்குக் கடிதம் எழுதியுள்ளார்.
இந்நிலையில் டெல்லி குடியரசு தின அணிவகுப்பிற்கு நிராகரிக்கப்பட்ட அலங்கார ஊர்திகள் தமிழகத்தில் காட்சிப்படுத்தப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், 'விடுதலைப் போராட்ட தியாகிகளின் வீரத்தையும் தீரத்தையும் நினைவுகூரும் விதமாக ஊர்தி வடிவமைக்கப்பட்டது. எவ்வித காரணமும் குறிப்பிடாமல் தமிழ்நாட்டின் அலங்கார ஊர்தி பங்கேற்பதற்கான வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியையும்,வருத்தத்தையும் அளிக்கிறது. ஆங்கிலேய வல்லாதிக்க எதிர்ப்பில் தமிழ்நாட்டின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது. வேறு எந்த மாநிலத்திற்கும் சற்றும் சளைக்காத வகையில் விடுதலைப் போரில் தமிழகத்தின் பங்களிப்பு முக்கியமானது.
வேலூர் புரட்சி ஆங்கிலேய வல்லாதிக்க எதிர்ப்பு வரலாற்றில் முக்கிய தொடக்கமாகும். ஜான்சிராணி வாள் வீசுவதற்கு முன்பே ஆங்கிலேயரை எதிர்த்துப் போரிட்டவர் வீரத்தாய் வேலுநாச்சியார். எனவே சென்னையில் நடைபெற இருக்கும் குடியரசு தின விழாவில் தமிழக அலங்கார ஊர்திகள் பங்கேற்கும். அதேபோல் தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களுக்கும் அலங்கார ஊர்தி பயணப்படும். கோயம்பேடு பேருந்து நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த புகைப்படக் கண்காட்சி முக்கிய நகரங்களில் நடத்தப்படும். விடுதலைப் போரில் தமிழகம் என்ற புகைப்பட கண்காட்சி நாட்டின் பிற முக்கிய நகரங்களிலும் நடத்த ஏற்பாடு செய்யப்படும் என மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.