Skip to main content

மாறி மாறி மகனுக்கே பதவி வாங்கி மற்ற வன்னியர்களுக்கு ‘பே....பே....! காட்டிய... -ராமதாஸ் மீது முரசொலி விமர்சனம்

Published on 10/10/2019 | Edited on 10/10/2019

 

நரிக்கண்ணீர் வடிக்காதீர் நன்றி மறக்காதீர் என்ற தலைப்பில் முரசொலியில் மருத்துவர் ராமதாசுக்கு பாட்டாளி தொண்டனின் பகீர் கடிதம் என்று கட்டுரை வெளிவந்துள்ளது. 
 

அதில், 
 

விக்கிரவாண்டியில்  `ஓட்டுப்  பொறுக்க  வேண்டும்’என்பதற்காக ஏ.கோவிந்தசாமி அவர்களுக்கு மணிமண்டபம் கட்டப்போவதாக தி.மு.க.தலைவர் கூறியிருப்பதாக,தங்கள்  வயதுக்கும்,  வகிக்கும் பொறுப்புக்கும்  தகுதியற்ற  நாலாந்தர  வார்த்தைகளை  ஏன்  பொறுக்கியுள்ளீர்களோ; தெரியவில்லை!  கோவிந்தசாமி  அவர்களின்புதல்வருக்கு  ஏன்  தேர்தலில்  போட்டியிட  வாய்ப்பளிக்கவில்லை  என்று  கேட்டிருக்கிறீர்கள்?

 

ramadoss - anbumani ramadoss



ஏ.கோவிந்தசாமி  அவர்களின்  மனைவியும்,  மகனும் தி.மு.கழகம்  சார்பில்  போட்டியிட்டு  வெற்றி பெற்று  சட்டமன்ற  உறுப்பினர்களாகத்  தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள்! அந்த வரலாற்றை எல்லாம் ஏன் மறைக்கிறீர்கள். ஒரே  ‘கேபினட்’  பதவியா  தேர்தலில்  நின்று  போட்டியிடா விட்டாலும்   அந்தப்   பதவி   என்   மகனுக்கே வேண்டும், எம்.பி. வேட்பாளரா, அதுவும் என் மகன்தான், எம்.எல்.ஏ.  வேட்பாளரா  -அதுவும்  என்  மகன்தான், முதல் மந்திரி வேட்பாளரா, அதுவும்  என்  மகன்தான், எம்.பி.  தேர்தலுக்கு  நின்று தோற்று  விட்டாரா;  பரவாயில்லை.  பேரம் பேசி  பெற்ற ராஜ்யசபா உறுப்பினர் பதவியைப் பெற்று மகனை எம்.பி. ஆக்கி விடலாம் - என மாற்றி மாற்றி மகனுக்கே பதவிகளை  வாங்கித்  தந்து,  மற்ற  வன்னியச்  சொந்தங்களுக்கு ‘பே....பே....!  காட்டிய  நீங்கள்  அறிக்கைவெளியிடும்  போது  இந்தத்  தாக்குதல்கள்  எல்லாம்வருமே என எண்ணிப் பார்த்திட வேண்டாமா?


 

தி.மு.க.வின்  தளகர்த்தர்களாக  இருந்த  வன்னியர்கள்  எல்லாம்  உதாசீனப்படுத்தப்பட்டார்கள் என உண்மைக்கு  மாறாக  நீங்கள்  கூறலாமா;  தி.மு.கழகம் ஒரு அரசியல் கட்சியாக துவக்கப்பட்டது. எல்லா வகுப்பினரும்  இணைந்து  வளர்த்த  இயக்கம்  தி.மு.கழகம்!ஆனால், வன்னிய சமுதாய மக்கள் பெயரைச் சொல்லி ஆரம்பித்த  கட்சியின்  மறுதோற்றமாகத்  தோன்றியுள்ள பாட்டாளி   மக்கள்   கட்சி   ஆரம்பித்தபோது   இருந்த தளகர்த்தர்கள்         எல்லாம்         உதாசீனப்படுத்தப்படவில்லையா?
 

கட்சியின் முன்னாள் தலைவர் பேராசிரியர் தீரன் 21 ஆண்டு காலம் பிரிந்து செல்லவில்லையா? இயக்கத்தின் இதயநாடியாக விளங்கிய வேல்முருகனை உதாசினப்படுத்தி வெளியேற்றவில்லையா? பு.த.இளங்கோவன்,  பு.த.  அருள்மொழி  ஆகியோர் புண்பட்டு  போய்விட வில்லையா.... ஏன்? காடுவெட்டி குருவின் குடும்பம் உங்களைசபிக்கவில்லையா? இப்படி எல்லாம் நீங்கள்  நம்  பாட்டாளி  சொந்தங்களைஉதாசீனப்படுத்தி  விட்டு,  சாகும்  வரை தி.மு.கழகத்திலேயேஇருந்து  உயிர்விட்ட  அந்தக்  கட்சியின்  வன்னிய  முன்னணியினர் உதாசீனப்படுத்தப்பட்டனர்  என்று  கூறினால்  உண்மைநிலை  அறிந்த  என்  போன்றவர்கள்  இதை எல்லாம்  எண்ணிப்பார்க்க  மாட்டார்களா?


 

தீரனும், வேல்முருகனும், பு.த.இளங்கோவன்,  பு.த.அருள்மொழி போன்றவர்களும் இந்தக் கட்சி உதயமாக எத்தனை பாடுபட்டவர்கள். அவர்களை எல்லாம் எவ்வளவு கேவலமாகப் பேசினீர்கள்; நினைவில் இல்லையா? இப்படி உங்களை நம்பி வந்த எத்தனை வன்னியர்களை நட்டாற்றில் விட்டீர் கள் எண்ணிப்பாருங்கள்!
 

பொய் - புரட்டு - புளுகு இவற்றை வைத்து பாட்டாளிச் சொந்தங்களை எத்தனை நாள் ஏமாற்ற முடியும்? இப்போதே முக்கால்வாசி பேர் உங்கள் பேச்சை நம்பி ஏமாறத்  தயாராயில்லை! கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தின் மற்றும் இந்தியாவின் ஆளும் கட்சிகளோடு கூட்டணி சேர்ந்து, நமது சமுதாய மக்கள் அதிகம் உள்ள தொகுதிகளாகத் தேர்ந்தெடுத்துப் போட்டியிட்டும் ஒரு தொகுதியில் கூடவெற்றி பெற முடியாதது எதைக் காட்டுகிறது?
 

நம் பாட்டாளிச் சொந்தங்கள் எல்லாம் உண்மை உணர்ந்து விட்டனர் என்பதையும், இனியும் உங்களை நம்பத் தயாராக இல்லை  என்பதையும்  காட்டவில்லையா? இப்படி  இடக்கு  மடக்காக பேசியும்,  அறிக்கை  விட்டும், இருக்கும் என்னைப் போன்ற ஒன்றிரண்டு சொந்தங்களையும் விரட்டி  விட்டு  விடாதீர்கள்!  உங்கள்  வீட்டு  ரசம்  மணக்க நீங்கள்தான்  வன்னியர்களை கருவேப்பிலையாக  உபயோகிக்கிறீர்கள் என்ற உண்மையை வன்னியர்கள் உணரத் தொடங்கிவிட்டனர்.கடந்த  நாடாளுமன்றத்  தேர்தலுக்கு  முன்  10  வாக்குறுதிகளை ஏற்றதால்தான் பா.ஜ.க., அ.தி.மு.க. அணியோடு கூட்டுசேர்ந்ததாகக்  கூறினீர்களே?  அதில் ஏதாவது  நிறைவேற்றப்பட்டதா?  -  என  விழித்துக்  கொண்ட  நம்  இன  மக்கள்  கேட்கிறார்கள்... நீங்கள் அறிக்கையில் குறிப்பிட்ட  “சீனி சர்க்கரைசித்தப்பா  ஏட்டில்  எழுதி  நக்கப்பா”  -  என்ற பதிலை  உங்கள் சார்பில் சொல்லி விடவா? இப்படிக்கு, விழிபிதுங்கி நிற்கும் பாட்டாளி தொண்டன்.

 

சார்ந்த செய்திகள்