பிரதமர் நரேந்திர மோடியை இன்று இரவு தொலைபேசி வாயிலாக பேச இருக்கிறார் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ். பிரதமரிடம் பேசும்போது, "இன்னும் 15 நாட்களுக்கு தேசம் முழுவதும் ஊரடங்கை கடைப்பிடிக்க அறிவுறுத்த வேண்டும்" என வேண்டுகோள் வைக்க இருக்கிறார்!
கரோனா வைரஸ் பரவலை தடுக்கும் முகமாக தேசம் முழுவதும் ஒரு நாள் சுய ஊரடங்கை கடைப்பிடிக்குமாறு அறிவுறுத்தியிருந்தார் பிரதமர் மோடி! அதன்படி இன்று (22.3.2020) தேசம் முழுவதும் மக்கள் ஒத்துழைப்புத் தந்து சுய ஊரடங்கை கடைப்பிடித்து வருகின்றனர். இந்த நிலையில், இந்த சுய ஊரடங்கை மேலும் 15 நாட்களுக்கு கடைப்பிடிப்பது அவசியம் என்கிற கோரிக்கையை மோடியிடம் வைக்க திட்டமிட்டிருந்தார் ராமதாஸ்.
இதனிடையே , மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், ராமதாஸை தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, கரொனா வைரஸின் பரவுதலை தடுப்பதற்கு ஒரே வழி, குறைந்த பட்சம் 15 நாட்கள் தனிமையில் இருக்க மக்கள் பழகிக்கொள்ள வேண்டும் என்பதையும் மத்திய-மாநில அரசுகள் 15 நாட்கள் 'டோட்டல் ஷட்டவுன்' னை அறிவிக்க செய்ய வேண்டும் என்பதையும் பாமக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. பிரதமர் சொன்னால்தான் மக்கள் கேட்பார்கள். இது குறித்து பிரதமரிடம் பேச என தனது விருப்பதை தெரிவித்திருக்கிறார் ராமதாஸ்.
இந்த நிலையில், இதனை பிரதமரின் கவனத்து கொண்டு சென்றுள்ளார் நிர்மலா சீதாராமன். இதனை தொடர்ந்து, இன்று இரவு ராமதாஸை பேச சொல்லி மோடி தெரிவித்திருக்கிறார். இந்த விபரம் ராமதாஸுக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் மோடியிடம் பேசவிருக்கும் ராமதாஸ், ' தங்களின் அறிவிப்பை ஏற்று மக்கள் ஒத்துழைப்பத் தந்துள்ள நிலையில், இதனை மேலும் 15 நாட்களுக்கு அமல்படுத்த மக்களுக்கு வேண்டுகோள் வைக்க வேண்டும் " என மோடியிடம் வலியுறுத்தவிருக்கிறார்.