Skip to main content

அண்ணாமலை ரகசிய பரிகார பூஜை! கமலாலயத்துக்குள் குபீர் புகை! 

Published on 08/06/2023 | Edited on 08/06/2023

 

annamalai kamalalayam

 

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கமலாலயத்தில் இன்று (08/06/23) ரகசிய பூஜை நடத்தியிருக்கிறார். 

 

சென்னையில் உள்ள பாஜக கட்சித் தலைமையகமான கமலாலயத்தில் அண்ணாமலைக்கும், மத்திய அமைச்சர் முருகனுக்கும் தனித்தனி அறைகள் இருக்கிறது. தனது அறையை நவீனப்படுத்த விரும்பினார் அண்ணாமலை. அதனைப் புதுப்பிக்கும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டன. இதனால் தனது அறையைக் காலி செய்துவிட்டு அமைச்சர் முருகனின் அறையை ஆக்கிரமித்துக் கொண்டார் அண்ணாமலை. முருகனும் கமலாலயத்துக்கு வருவதே இல்லை என்பதால் அவரது அறையை ஆக்கிரமித்துக் கொள்ள அண்ணாமலைக்கு வசதியாக இருந்தது. 

 

annamalai kamalalayam

 

இந்த நிலையில், சில மாதங்களாக நடந்து வந்த புதுப்பிக்கும் பணிகள் கடந்த மாதம் நிறைவு பெற்ற நிலையில், 20 நாட்களுக்கு முன்பு மீண்டும் தனது அறைக்கு இடம் மாறியிருந்தார் அண்ணாமலை. புதுப்பிக்கப்பட்ட அறைக்கு அவர் இடம் மாறியதில் இருந்தே நிறைய சிக்கல்களை எதிர் கொண்டு வருகிறார். குறிப்பாக, எந்த ஒரு காரியத்தை தொட்டாலும் அது சக்சஸ் ஆகவில்லை. கட்சியின் தேசியத் தலைவர்களிடம் அடிக்கடி திட்டு வாங்குகிறார். அவரிடம் கொடுக்கப்பட்ட எந்த கூடுதல் பொறுப்பிலும் அவர் சோபிக்கவில்லை. அவருக்கு எதிரான புகார்கள் தொடர்ந்து மேலிடத்துக்கு சென்றபடி இருக்கிறது. இதனால், அவர் மீதான நம்பிக்கையை மேலிடம் இழந்து வருகிறது. இதனால், தனது தலைவர் பதவிக்கே ஆபத்து வரலாம் என்று உணர்கிறார் அண்ணாமலை. 

 

இந்த மன உளைச்சலில் இருந்த அண்ணாமலை, ஒரு ஆஸ்தான ஜோதிடர் ஒருவரிடம் ஆலோசனைக் கேட்க, "நீங்கள் பயன்படுத்தும் அறையில் ஒரு பரிகார பூஜை நடத்துங்கள். ஓஹோன்னு இருக்கும் உங்கள் அரசியல்" என்று யோசனைத் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகத்திடம் இதனை அண்ணாமலை கூற, "ஆமாம்... ஆமாம்... பரிகார பூஜை செய்தால் எல்லாம் நலமாகும்" என அவர் பங்குக்கு தெரிவித்துள்ளார். 

 

annamalai kamalalayam

 

இதனைத் தொடர்ந்து, அந்த பரிகார பூஜையை நடத்த அண்ணாமலையும் கேசவ விநாயகமும் திட்டமிட்டு அதற்கான ஏற்பாடுகளைச் செய்தனர். அதன்படி இன்று விடியற்காலை 4 மணியிலிருந்து 6 மணி வரை இந்த பரிகார பூஜை கமலாலயத்தில் ரகசியமாக நடந்துள்ளது. இதில் அண்ணாமலையும் கேசவ விநாயகமும் கலந்து கொண்டனர். கட்சிக்காரர்கள் யாரையும் அழைக்காமல் பூஜையை நடத்தி முடித்திருக்கிறார்கள். 

 

 

சார்ந்த செய்திகள்