Skip to main content

’காறி காறித் துப்புகிறார்கள்’-பாமகவில் இருந்து விலகியதற்கான காரணங்களைச்சொல்லும் ரஞ்சித்

Published on 26/02/2019 | Edited on 26/02/2019

 

கடந்த செப்டம்பர் மாதம் 18ம் தேதி அன்று திண்டிவனம் அருகே உள்ள தைலாபுரம் தோட்டத்துக்கு சென்ற நடிகர் ரஞ்சித், அங்கு பா.ம.க. நிறுவனர்  ராமதாஸ் முன்னிலையில் பா.ம.க. கட்சியில் இணைந்தார். இதனைத்தொடர்ந்து  ராமதாஸ் நடிகர் ரஞ்சித்துக்கு பா.ம.க.வில் மாநில துணைத்தலைவர் பொறுப்பை வழங்கினார்.

 

நடிகர்கள் அரசியலுக்கு வருவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்த பாமகவில், நடிகர் ஒருவருக்கு துணை தலைவர் பதவி கொடுக்கப்பட்டது பரபரப்பாக பேசப்பட்டது.  இந்நிலையில் 26.2.2019 இன்று மாலையில் கோவையில் செய்தியாளர்களை சந்தித்த ரஞ்சித்குமார்,  ராமதாஸ் மீதும் அன்புமணி ராமதாஸ் மீதும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை கூறி, தான் பாமகவில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.  

 

a

 

செய்தியாளர்களிடம் தொடர்ந்து பேசிய அவர்,    ’’ஏன் இந்த கூட்டணி வைத்துள்ளார்கள் என்று ஒவ்வொரு நாளூம் யோசித்தேன்.  10 அம்ச  கோரிக்கைகள் வைத்து கூட்டணி சேர்ந்ததாக அவர்கள் சொல்கிறார்கள்.   10 கோரிக்கையை நிறைவேற்றினால்தான் கூட்டணி சேர முடியும் என்று சொல்லியிருந்தால் என் உயிரை கொடுத்து வேலை பார்த்திருப்பேன்.     10 கோரிக்கையை கொடுத்து கூட்டணி சேர்ந்தேன் என்பது இந்த ஆண்டின் மிகச்சிறந்த நகைச்சுவை.  இப்போது குழந்தை பெற்றுக்கொள்கிறோம்.  ஆறு மாதம் கழித்து தாலி கட்டிக்கொள்கிறோம் என்று சொல்வது மாதிரி இருக்கிறது.  உள்ளாட்சி தேர்தல் வரை நன்றாக இருப்பார்கள்.  இளைஞர்களிடமும், மாணவர்களிடமும் இன்று அதிகமாக விழிப்புணர்வு இருக்கிறது.   அப்படி இருக்கும்போது இப்படி முட்டாள்தனமாக கோரிக்கைகளை சொல்லலாமா?  உள்ளாட்சி தேர்தல் வரை நன்றாக இருப்பார்கள்.  அதற்கு அப்புறம்,  நாங்கள் வைத்த கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை.  அதனால் கூட்டணியில் இருந்து விலகுகிறோம் என்று சொல்லிவிடுவார்கள்.  மீண்டும் மாற்றம் முன்னேற்றம் என்று இளைஞர்கள் கொடி பிடிப்பார்கள்.   

 

a


மதுக்கடைக்கு எதிராக போராடிவிட்டு அது எப்படி டாஸ்மாக் வைத்திருப்பவனிடமே கூட்டணி வைக்க முடியும்?  இது என்ன அடிப்படை? ஆளுங்கட்சி்யின் அனைத்து அமைச்சர்கள் மீதும் ஊழல் வழக்கு போட்டு அந்த வழக்கு நிலுவையில் இருக்கிறது. மானங்கெட்டவனே, மண்ணாங்கட்டி, பொறம்போக்கு, அடிமை, ஐந்தறிவு படைத்தவர்கள் , ஆண்மை அற்றவர்கள் என்று ஆளுங்கட்சியினர் மீது மிகவும் கீழ்த்தரமாக தினமும் விமர்சனம் வைத்துவிட்டு  அவர்கள் காலையே பிடித்து கெஞ்சிக்கொண்டும், விருந்து வைப்பதை என்னால் ஜூரணிக்க முடியவில்லை. அப்படிப்பட்ட கீழ்த்தரமானா அரசியல் எனக்கு ரொம்ப மனசுக்கு கஷ்டத்தை கொடுக்கிறது.     நாலு பேருக்கு கூஜா தூக்கிக்கொண்டு என்னால் வாழ முடியாது. தரக்குறைவாக விமர்சித்துவிட்டு கூட்டணி வைத்துள்ளதை  என்னால் ஏற்கமுடியவில்லை.

 

தப்பு யார் செய்தாலும் தப்பு தப்புதான்.  கடந்த சில நாட்களாக நான் ரொம்பவும் மனம் நொந்து, இந்த கூட்டணி சேர்ந்ததில் கொஞ்சமாவது நியாயம் இருக்கிறதா என்று என் அம்மாவிடம் கேட்டேன், என் மனைவியிடம் கேட்டேன், என் நண்பர்களிடம் கேட்டேன்.    சாலையில் சந்திப்பவர்களிடம் கேட்டேன்.   காறி காறித் துப்புகிறார்கள்.   

 

மாற்றத்தை உருவாக்க வேண்டும் என்றுதான் அன்புமணி பின்னால் லட்சக்கணக்கான இளைஞர்கள் சென்றார்கள்.  அவர்களின் நினைப்பில் எல்லாம் மண்ணை அள்ளி போட்டு விட்டீர்களே.  அவர்கள் சமூகம் பெரும்பான்மையான சமூகம்.  30 ஆண்டுகாலம் தடுக்கி தடுக்கி விழும்போதெல்லாம் அந்த மக்கள் தாங்கி தாங்கி பிடித்திருக்கிறார்கள்.   அவர்களை எல்லாம் ஏமாற்றிவிட்டார்கள்’’என்று தெரிவித்தார். 

சார்ந்த செய்திகள்