தமிழக சட்டப்பேரவையில் முதன் முறையாக காகிதமில்லா இ-பட்ஜெட் கடந்த 13 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. 13 ஆம் தேதி கலைவாணர் அரங்கில் நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தில் தமிழ்நாடு நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் தனது முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதற்கடுத்த நாளே வேளாண்துறைக்கான தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது வேளாண் பட்ஜெட்டை எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தாக்கல் செய்தார்.
தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் 13 ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 21-ஆம் தேதி வரை நடைபெறும் என முன்னரே அறிவிக்கப்பட்டிருந்தது. தமிழக சட்டப்பேரவையில் பொது பட்ஜெட், வேளாண் பட்ஜெட் மீதான விவாதம் 16ஆம் தேதி தொடங்கும். 19ஆம் தேதி வரை நான்கு நாட்கள் நடைபெறும் பட்ஜெட் மீதான விவாதத்தில் கடைசி நாளில் பதிலுரை அளிக்கப்படும். அதேபோல் தமிழக சட்டப்பேரவையில் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் ஆகஸ்ட் 23-ஆம் தேதி தொடங்கும். காவல்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்கு செப்டம்பர் 20 ஆம் தேதி முதல்வர் பதிலளிப்பார் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் சட்டப்பேரவை கூட்டத்தொடர் முன்னதாகவே முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
வரும் செப்டம்பர் 13 ஆம் தேதி ராஜ்யசபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் செப்.21 வரை பேரவையை நடத்தினால் உள்ளாட்சித் தேர்தல் தள்ளிப்போகும் என்பதன் காரணமாகவும் இது குறித்து இன்று மதியம் சபாநாயகர் அப்பாவு தலைமையிலான அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் எனவும் தகவல் வெளியானது. இந்நிலையில் சட்டப்பேரவை வரும் செப்.13 ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.