Skip to main content

’ராஜாஜி ஹாலுக்கு போன போது  தமிழர்கள் மேல் கோபம் வந்தது’ - ரஜினி பேச்சு

Published on 13/08/2018 | Edited on 13/08/2018
ra

 

மறைந்த திமுக தலைவர் கலைஞருக்கு நடிகர் சங்கம் சார்பில் நினைவேந்தல் கூட்டம் நடைபெற்றது.  சென்னை  காமராஜர் அரங்கில் இன்று மாலை நடைபெற்ற இவ்விழாவில் ரஜினிகாந்த், விஷால், கார்த்தி உள்ளிட்ட நடிகர்களும், நடிகைகளும் பங்கேற்று  மேடையில் வைக்கப்பட்டிருந்த கலைஞர் உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். இந்த நினைவேந்தல் கூட்டத்தில் திமுக செயல்தலைவர் ஸ்டாலினும் கலந்து கொண்டார்.

 

rs


இக்கூட்டத்தில் நடிகர் ரஜினிகாந்த் பேசியபோது,  ‘’கலைஞர் மாமனிதர்.  அவர் எனக்கு நண்பராக இருந்தார். அரசியல் செய்ய வேண்டும் என்று யாராவது வந்தால் முதலில் என்னிடம் நட்புகொள். இல்லையென்றால் என்னை எதிர்கொள்.   அப்போதுதான் தமிழ்நாட்டில் அரசியல் செய்ய முடியும் என்று அரசியல் சதுரங்கத்தில் புகுந்து விளையாடியவர் கலைஞர்.  கலைஞரால் அரசியலுக்கு வந்தவர்கள் பல ஆயிரம் பேர்.  அவரால் தலைவர்கள் ஆனவர்கள் பல நூறு பேர்.   யாரும் தப்பாக நினைத்துக்கொள்ள கூடாது....அதிமுக ஆண்டு விழாவிற்கு புரட்சித்தலைவர் போட்டோ வைக்கிறார்கள்.   அதற்கு பக்கத்திலேயே கலைஞரின் போட்டோவையும் வைக்க வேண்டும்.   அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் உருவானதே கலைஞரால்தான். எத்தனையோ சூழ்ச்சிகள், துரோகங்களை  கடந்து கட்சியை வழிநடத்தியவர் கலைஞர்.    அவர் மறைந்தார் என்றதும் என்னால் தாங்க முடியவில்லை.  அவருடைய பேச்சுகள்,  அவருடன் நான் இருந்த காலங்கள் எல்லாம் நினைவில் வந்து வந்து போகின்றன.  மனசுக்கு தாங்க முடியவில்லை.  

 

rain


ராஜாஜி ஹாலில் காலையில் நான் கலைஞருக்கு அஞ்சலி செலுத்திவிட்டு திரும்பி பார்க்கிறேன்.  சில ஆயிரம் பேர்தான் இருந்தனர். தமிழ் மக்களூக்காக எவ்வளவு உழைத்தவர்.  அவரால் பயன்பெற்ற உடன்பிறப்புக்கள் எத்துனை பேர்.  அவர்கள் எல்லாம் எங்கே.  இவ்வளவு குறைவாக கூட்டம் இருக்கிறதே என்று எனக்கு தமிழ்மக்கள் மேல கோபம் வந்தது.    வீட்டிற்கு சென்று கலைஞரின் பேச்சுக்களை எல்லாம் யூடியூப்பில் போட்டு பார்த்துவிட்டு படுத்துவிட்டேன்.  பின்னர் ஒரு மணி அளவில் எழுந்து டிவியை போட்டுப்பார்த்தேன்.   அலை அலையாக கூட்டம் வந்தது. கலைஞருக்கு தகுந்த மரியாதை செய்த  தமிழர்கள் தமிழர்கள்தான் என்று மகிழ்ந்தேன்.  என் கண்ணில் தண்ணீர் வந்துவிட்டது’’என்று நெகிழ்ந்தார்.

சார்ந்த செய்திகள்