நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது உறுதி என்று அறிவித்திருந்தார். அதேபோல் 234 தொகுதிகளிலும் வருகிற சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவேன் என்று கூறியிருந்தார். அரசியலுக்கு வருவேன் என்று அறிவித்த நடிகர் ரஜினி ஆன்மீக அரசியலை முன்னெடுத்து செல்வேன் என்று கூறினார். மதம், சாதி வேறுபாடு இல்லாத அரசியலாக இருக்கும் என்றும் சிஸ்டம் சரியில்லை என்றும் கூறினார். ரஜினியின் இந்த பேச்சு அரசியல் கட்சியினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் ஏப்ரல் மாதத்திற்குள் ரஜினி புதிய கட்சி தொடங்க வாய்ப்பு உள்ளது என்று பேசி வருகின்றனர். அப்போது மதுரையில் பெரிய மாநாடு மாதிரி நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் கூறுகின்றனர். அப்போது கட்சியின் பெயர், கொடியை, ரஜினி அறிமுகம் செய்வார் என்றும் கூறுகின்றனர்.
இதனையடுத்து கட்சி ஆரம்பித்து சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டால் கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி சட்டசபை தொகுதியில் போட்டியிடுவார் என்கின்றனர். இந்த பகுதியில் கன்னடம் பேசும் மக்கள் அதிகம் இருப்பதாக கூறுகின்றனர். இதனால் ரஜினி இந்த தொகுதியில் போட்டியிட்டால் வெற்றிவாய்ப்பு பெற அதிக வாய்ப்பு உள்ளதாக சொல்கின்றனர். மேலும் அந்த தொகுதியில் ரஜினி மக்கள் மன்றம் சார்பாக ஏரி துார் வாருவது, நலத்திட்ட உதவிகளை வழங்குவது போன்ற பல்வேறு பணிகளை செய்து வருவதாகவும் கூறுகின்றனர். 2011 மற்றும், 2016ல் நடந்த சட்டசபை தேர்தல்களில், வேப்பனஹள்ளி தொகுதியில் தி.மு.க வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்படத்தக்கது.
இதனால் திமுக வெற்றி பெற்றுள்ள தொகுதியில் ரஜினி போட்டியிட்டால் அந்த தொகுதியில் கடும் போட்டி நிலவும் என்றும் திமுகவினர் கூறிவருகின்றனர். மேலும் வேலூர், திருச்சி ஆகிய தொகுதிகளும் ரஜினி போட்டியிட்டால் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது என்றும் கூறிவருகின்றனர். குறிப்பாக வேலூர் தொகுதியில் அதிக உறுப்பினர்களை ரஜினி மக்கள் மன்றத்தினர் சேர்த்துள்ளனர் என்பது முக்கியமானதாக சொல்கின்றனர்.