தி.மு.க.-காங்கிரஸ் கட்சிகளுக்கிடையிலான உரசலில் சமாதானம் எட்டப்பட்டாலும் இன்னும் முழுமையாக இருதரப்புக்கு இடையிலேயும் பரபரப்பு அடங்கவில்லை என்று சொல்லப்படுகிறது. ஊரக உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக தி.மு.க.வுக்கும், காங்கிரசுக்கும் இடையிலான உரசல், சோனியாவின் முயற்சியால் சமாதானமானது. சமாதான முயற்சி நடந்துகொண்டிருந்த நேரத்தில் தி.முக. பொருளாளரான துரைமுருகன், கூட்டணி உறவு முறிந்தால் எங்க கட்சிக்கு எந்தவித நஷ்டமும் இல்லை என்று கூறியது மறுபடியும் காங்கிரஸ் தரப்பில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், தன் லைனில் வந்த துரைமுருகனின் மகனான கதிர் ஆனந்த் எம்.பி.யிடம், கூட்டணிக்கட்சி பற்றி பொது வெளியில் உங்க அப்பா எதுக்கு கருத்துச் சொல்லணும். தி.மு.க. இனி ஆட்சிக்கு வரக்கூடாதுன்னு அவர் நினைக்கிறாரா?ன்னு ஸ்டாலின் தன் கோபத்தைக் காட்டியிருக்கிறார். இதைத் தொடர்ந்து ஸ்டாலின் லைனுக்குப் போன துரைமுருகன், நான் காங்கிரஸை வேண்டும் என்றே விமர்சிக்கவில்லை. பத்திரிகையாளர்கள் எடக்கு மடக்காகக் கேள்வி எழுப்பியதால், அவர்களுக்கு நான் சொன்ன தமாஷ் பதிலை அவர்கள் சீரியஸாக்கிவிட்டார்கள் என்று தன்னிலை விளக்கம் கொடுத்திருக்கிறார்.
மேலும் சமீபத்தில் முதல்வர் எடப்பாடி, "எங்கள் கட்சியில் இருக்கும் அத்தனை பேருமே முதலமைச்சர் தான் என்று பேசியதை விமர்சனம் செய்த அவர், அப்படியென்றால், முதல்வர் பதவியை ஓ.பி.எஸ்.சிடம் கொடுக்கட்டும் என்று கூறி எடப்பாடித் தரப்பையே அதிர வைத்து விட்டார். இருந்தும் இந்தச் சூழலில் புதுக்கோட்டை மாவட்டத்தில் தங்களுக்கு எதிராக வாக்களித்த காங்கிரஸ் ஊராட்சிக் கவுன்சிலர் ஒருவரை தி.மு.க. தங்கள் கட்சியில் சேர்த்துக் கொண்டுள்ளது. இதுதான் கூட்டணி தர்மமா?ன்னு இப்போது மீண்டும் காங்கிரஸ் தரப்பில் முணுமுணுப்பு எழுந்திருக்கு. இரு தரப்புக்கும் இடையில் மழை விட்டாலும் தூவானம் விடலை என்று கூறுகின்றனர்.