சிவகாசியை அடுத்துள்ள திருத்தங்கல் பள்ளி ஒன்றில் தனது வாக்கைப் பதிவு செய்துவிட்டு செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி..
“அதிமுக அலை வீசுகிறது. மக்கள் ஆதரவு பெருகிவருகிறது. எளிமையான, வலிமையான முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் ஆட்சி சிறப்பாக இருக்கிறது. நேரடியாகவே முதலமைச்சரை சந்தித்துக் குறைகளைச் சொல்ல முடியும் என்பதால், அவர் தலைமையில் ஆட்சி தொடரவேண்டும் என்று 8 கோடி தமிழ் மக்களும் விரும்புகிறார்கள்.

தமிழகத்தில் பணப்புழக்கம் அதிகமாக இருக்கிறது என்று சொன்னால், பொருளாதாரத்தில் உயர்ந்திருக்கிறது என்று அர்த்தம். கள்ளப்பணத்தை ஓட்டுக்கு கொடுத்துக்கொண்டிருப்பது அமமுகதான். அவர்கள் வைத்திருந்த பணத்தை வருமானவரித்துறை பறிமுதல் செய்திருக்கிறது. ஆண்டிபட்டி தொகுதியில் கைப்பற்றப்பட்ட பணம் எங்களுடையது அல்ல என்று சொல்கிறார் தங்கத்தமிழ்ச்செல்வன். அவர்களில் அலுவலகத்துக்குள் போய் அதிமுககாரன் பணம் வைக்க முடியுமா? கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்று சொல்வதற்கு அமமுககாரர்கள் மாதிரி ஆட்கள் இந்த உலகத்திலேயே இல்லை. ஆளும் கட்சியாக யார் இருந்தாலும், எதிர்க்கட்சியில் இருப்பவர்கள் சொல்லக்கூடிய வாடிக்கையான குற்றச்சாட்டுதான். தேர்தல் ஆணையம் ஒருதலைப்பட்சமாக செயல்படுகிறது எனச்சொல்வது ஒன்றும் புதிதல்ல. மக்கள் எதிர்ப்பு திமுக மீதும் தினகரன் மீதும் இருக்கிறது. நாட்டைக் கொள்ளையடிப்பதற்காகத்தான் தினகரன் ஒரு கூட்டத்தை உருவாக்கியிருக்கிறார்.
ஸ்டாலின் அடித்தது போதாது என்று ஊரையடித்து உலையில் போடணும்னு வெறிபிடித்து அலைகிறார். இதை மக்கள் புரிந்துகொண்டார்கள். தமிழகம் முழுவதும் எடப்பாடி பிரச்சாரம் செய்தபோது, அவர் முகத்தில் எங்கேயாவது யாரையாவது முகம் சுழித்துப் பேசினாரா? அவர் முகத்தில் கோபக்குறி இருந்ததா? அன்பா பேசினார்; பண்பா பேசினார். ஸ்டாலின் பேச்சு எப்படி இருந்தது? காரம் இருந்தது. கொடூரம் இருந்தது. அவருடைய குணாதிசயம் முழுமையாக வெளிப்பட்டது. எப்படியாவது ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற வெறித்தனம் தெரிந்தது. ஆட்சியைப் பிடிப்பேன்; ஆட்சியைக் கவிழ்ப்பேன். மத்தியில் கவிழ்ப்பேன்; இங்கேயும் கவிழ்ப்பேன் என்ற வெறித்தனமாகத்தான் பேசினார். மக்கள் மீது பாசமோ, மக்களுக்குத் தொண்டாற்ற வேண்டும் என்ற எண்ணமோ, ஸ்டாலினுடைய பேச்சிலோ, நடைமுறையிலோ தெரியவில்லை. அதனால்தான், தமிழகத்தில் அதிமுக அலை வீசுகிறது.” என்றார்.
அமைச்சர் அவர் சார்ந்துள்ள கட்சிக்கு அலை வீசுவதாகச் சொல்கிறார். அது ஆதரவு அலையா? எதிர்ப்பு அலையா? என்பதை வாக்களித்துவரும் மக்கள் தீர்மானிப்பார்கள்.