முந்தைய பாஜக ஆட்சியின் போது நடைபெற்ற ஊழலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி சச்சின் பைலட் உண்ணாவிரதப் போராட்டத்தை நேற்று (11.04.2023) நடத்தினார்.
ராஜஸ்தான் மாநிலத்தில் தற்போது அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் கட்சி ஆட்சி நடத்தி வருகிறது. காங்கிரஸ் கட்சியின் இந்த ஆட்சிக்கு முன்பாக ஆட்சி செய்து வந்த வசுந்தரா ராஜே சிந்தியா தலைமையிலான பாஜக ஆட்சியின் போது நடைபெற்ற ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்க கோரி காங்கிரஸ் கட்சியின் ராஜஸ்தான் மாநில முன்னாள் துணை முதலமைச்சர் சச்சின் பைலட், ஆளும் காங்கிரஸ் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நேற்று ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டம் இருக்கப் போவதாக ஏற்கனவே அறிவித்து இருந்தார். ஆனால் இதற்கு காங்கிரஸ் கட்சியின் தலைமை கடும் எச்சரிக்கை விடுத்து இருந்தது.
இருப்பினும் எதிர்ப்பையும் மீறி சச்சின் பைலட் நேற்று ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டத்தை ஜெய்ப்பூர் நகரில் நடத்தினார். அதற்கு முன்னதாக அங்கு வைக்கப்பட்டு இருந்த சமூக சீர்திருத்தவாதியான மகாத்மா ஜோதிபா பூலேவின் உருவப்படம் மற்றும் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்த உண்ணாவிரதப் போராட்டமானது காலை 11 மணிக்குத் தொடங்கி மாலை 4 மணிக்கு முடிவடைந்தது.
அப்போது பேசிய சச்சின் பைலட்," முந்தைய பாஜக அரசின் ஊழலுக்கு எதிரான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மக்களுக்கு நான் உறுதி அளிக்கிறேன். ஊழலுக்கு எதிரான எனது போராட்டம் தொடரும்" என்றார். கட்சித் தலைமையின் கடுமையான எதிர்ப்பையும் மீறி சச்சின் பைலட் உண்ணாவிரதம் இருந்தது கட்சித் தலைமைக்கும் தொண்டர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் நேற்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கேரள மாநிலம் வயநாடு சென்று பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசியது குறிப்பிடத்தக்கது.