விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள மீனவர் குப்பமான எக்கியர் குப்பத்தின் வம்பாமேடு பகுதியில் விற்பனை செய்யப்பட்ட கள்ளச்சாராயம் குடித்து 14 பேர் உயிரிழந்த நிலையில், 66 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் ரூபாயும், சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும் நிவாரணமாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து முதல்வர் ஆறுதல் கூறியதுடன் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வருபவர்களையும் சந்தித்து நலம் விசாரித்தார்.
இந்நிலையில் இன்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம் கள்ளச்சாராயம் விவகாரம் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அப்போது பேசிய அவர், “கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களுக்கு எதற்கு 10 லட்சம். யார் பணத்தில் கொடுக்கப்படுகிறது. குடிக்காதவர்கள் கொடுத்த வரிப் பணத்தில் குடித்து இறந்தவர்களுக்கு எதற்கு கொடுக்கிறீர்கள்.
19 பேர் இறந்துள்ளார்கள். ஆளுக்கு 10 லட்சம். மொத்தமாக 1 கோடியே 90 லட்சம். 1558 பேரை கைது செய்துள்ளீர்கள். அவர்களிடம் அபராதம் வாங்கித்தானே உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு கொடுக்க வேண்டும். எங்கள் பணத்தில் ஏன் கொடுத்தீர்கள். நாட்டை பாதுகாக்க போய் இறந்தவர்களா இவர்கள். மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் இறந்தபோது எந்த குடும்பத்திற்காவது 10 லட்சம் நிவாரணம் கொடுத்துள்ளீர்களா. அங்குள்ள காவல் அதிகாரிகளுக்கும் எம்.பி., எம்.எல்.ஏக்களுக்கும் தெரியாமல் நடந்திருக்குமா? தெரியாமல் நடந்தால் அவர்களை ஏன் பணியிடை நீக்கம் செய்ய வேண்டும்” எனக் கூறினார்.