Skip to main content

தர்மபுரியில் தலை தப்பினால் போதும் என்று ஓடிவந்தீர்களே போதாதா? ராமதாஸுக்கு மு.ஞானமூர்த்தி பதிலடி

Published on 09/10/2019 | Edited on 09/10/2019

 

திமுக ஆட்சி அமைந்தவுடன் வன்னியர் சமுதாயத்திற்காக இட ஒதுக்கீடு கோரி, போராடி உயிர் நீத்த தியாகிகளுக்கு, விழுப்புரம் மாவட்டத்திலேயே மணி மண்டபமும், வன்னியர் சமுதாயத்தின் தனிப்பெருந் தலைவராகவும், "ஏஜி"என அண்ணாவால் அன்புடன் அழைக்கப்பட்ட ஏ.கோவிந்தசாமிக்கு மணி மண்டபமும் அமைக்கப்படும். ஏற்கனவே கலைஞர் தேர்தலில் கொடுத்த வாக்குறுதியின் அடிப்படையில் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான 20 சதவீத இட ஒதுக்கீட்டில், வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்குவது குறித்து திமுக அரசு அமைந்ததும் சட்ட வழிமுறைகளைப் பின்பற்றி உரிய நடவடிக்கை எடுக்கும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டிருந்தார்.
 

இதற்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வன்னியர்களுக்கு செய்து தருவதாக மு.க.ஸ்டாலின் கூறியிருப்பது வெற்று வாக்குறுதிகள் என்று பல்வேறு குற்றச்சாட்டுக்களை கூறி அறிக்கை வெளியிட்டிருந்தார். 
 

இந்த நிலையில் ''மருத்துவர் ராமதாஸ் அறிக்கையும்- ஒரு இட ஒதுக்கீட்டுப் போராளியின் குரலும்...'' என்ற தலைப்பில் செந்துறை வடக்கு திமுக ஒன்றியச் செயலாளர் மு. ஞானமூர்த்தி ராமதாஸின் ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் பதில் அளித்துள்ளார். 

 

ramadoss - mg


ராமதாஸ் : திமுகவின் தளகர்த்தர்களாக இருந்த வீரபாண்டி ஆறுமுகம், மதுராந்தகம் ஆறுமுகம், நெல்லிக்குப்பம் கிருஷ்ணமூர்த்தி போன்றவர்கள் அவர்களின் கடைசி காலத்தில் திமுக தலைமையால் எப்படியெல்லாம் உதாசீனப் படுத்தப்பட்டார்கள்; எப்படியெல்லாம் அவமானப் படுத்தப்பட்டார்கள்; அதனால் அவர்கள் எந்த அளவுக்கு மனம் நொந்து மறைந்தார்கள் என்பதை வன்னியர்கள் நன்கு அறிவர். அவற்றை எல்லாம் மறைத்து விட்டு வன்னியர் நண்பர் வேஷம் போட மு.க. ஸ்டாலின் முயன்றால் அது எடுபடாது. 
 


போராளி : பாமகவில் இணைந்த 1991முதல் சட்டமன்ற உறுப்பினர் பண்ருட்டியரையும், நெல்லிக்குப்பம் கிருஷ்ணமூர்த்தி அவர்களையும், வன்னியர் சங்கத்தலைவர் ச. சுப்பிரமணியம் ஐஏஎஸ் அவர்களையும் , பேராசிரியர் தீரனையும், வேல்முருகனையும், செந்துறை ஞானமூர்த்தியையும், புதா. இளங்கோவனையும், ஓமலூர் தமிழரசுவையும், மேல்மலையனூர் தமிழ்ச்செல்வனையும்,இப்படி ஆரம்ப காலத்தில் சங்கத்தை கட்டமைத்து உங்களுக்கு துணையாக இருந்த போராளிகளை கேவலப்படுத்தி வெளியேற்றியது யாருக்கும் தெரியாதா?. 


ராமதாஸ் : ஒரு கட்டத்தில் கட்சியின் மூத்த தலைவர்கள் பலரும் சிறையில் அடைக்கப்பட்ட காலத்தில் திமுகவை வழிநடத்தும் பொறுப்பை வன்னியரான ‘ஏ.ஜி’ அவர்களிடம் அண்ணா ஒப்படைத்தார். ஆனால்,  1969-ஆம் ஆண்டில் திமுக தலைவராக கலைஞர் பொறுப்பேற்ற பிறகு இன்று வரையிலான 50 ஆண்டுகளில் திமுகவின் தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் ஆகிய பதவிகளில் எத்தனை வன்னியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இப்போது தான் வேறு வழியின்றி திமுகவின் பொருளாளராக  துரைமுருகன் நியமிக்கப்பட்டுள்ளார். ஆனால், அவருக்கும் அதிகாரங்கள் வழங்கப்படவில்லை. பெயரளவில் மட்டும் அவர் பொருளாளராக பதவி வகிக்க, அந்த பதவிக்கு உரிய அதிகாரங்கள் அனைத்தையும் மு.க.ஸ்டாலினை சுற்றியுள்ள அவரது துதிபாடிகள் தான் அனுபவிக்கின்றனர் என்பதை மறுக்க முடியுமா?.
 

போராளி : பாமகவில் என்ன வாழ்கிறது. ஜிகே மணி, முயலுக்கு 3 கால் என்றால் ஆமாங்கையா 3 கால்தான் என்பவரைத்தானே தலைவராக போட்டிருக்கிரீர்கள். தத்துவார்த்த ரீதியாக உண்மைப் போராளிகள் யாரையாவது தலைவராக்கியதுண்டா?
 

ராமதாஸ் : வன்னியர்கள் மீது பாசம் வைத்திருப்பதாகக் கூறிக் கொள்ளும் மு.க.ஸ்டாலின் கட்சியின் தலைமை தான் தருமபுரி நிகழ்வின்போது வன்னியர்களை ஆதிக்க சாதி என்று விமர்சித்தது. தருமபுரிக்கு உண்மை கண்டறியும் குழுவை அனுப்பி வைத்து வன்னியர்கள் மீது அபாண்டமான பழிகளை சுமத்தியது. தருமபுரிக்கு உண்மை கண்டறியும் குழுமை அனுப்பிய திமுக, மரக்காணம் கலவரத்தின் போது விடுதலை சிறுத்தைகள் கட்சியினரால் இரு வன்னியர்கள் கொடூரமான வெட்டிக் கொல்லப்பட்ட போதும், கடலூர் மாவட்டம் குச்சிப்பாளையம் கிராமத்தின் வன்னியர்கள் தாக்கப்பட்ட போதும் உண்மை கண்டறியும் குழுக்களை திமுக தலைமை அனுப்பாதது ஏன்? வன்னியர்கள் மீதான ஸ்டாலினின் வெறுப்பு தானே?. 


போராளி : அது ஸ்டாலினுக்கு வன்னியர் மீதான வெறுப்பு என்று கட்டுக்கதை கட்டவேண்டாம். பாமக என்ற பெயரில் பாண்டிச்சேரியில் குடித்துவிட்டு மாமல்லபுரம் மாநாட்டுக்கு செல்லும் வழியில் உங்கள் தொண்டர்கள் ஏற்படுத்திய கலவரம் என்று உயர்நீதி மன்றமே உங்களை கண்டித்ததே நினைவில்லையா. உங்கள் கூட்டணி தலைவி ஜெயலலிதாவே உங்களை சட்டமன்றத்தில் கேவலமாக பேசி சிறையில் தள்ளினாரே ஞாபகம் இல்லையா. சிறையில் அடைத்ததோடு 150 ம் மேற்பட்ட வன்னியர்களை ஒரே நேரத்தில் குண்டர் சட்டத்தில் போட்டாரே மறந்துவிட்டதா?.
 

ராமதாஸ் : பொன்பரப்பி வன்முறையைத் தொடர்ந்து தம்மை கிழட்டு சிறுத்தை என்று அழைத்துக் கொண்ட போலி மதபோதகர் எஸ்ரா சற்குணம் வன்னியர்களை தாழ்த்தப்பட்டவர்கள் என்று விமர்சித்த போதும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வன்னியர்களை மரம் வெட்டிகள் என்று கொச்சைப் படுத்திய போதும், வன்னியர்கள் மீது பாசம் கொண்டவரான திமுக தலைவர் ஸ்டாலின் சீறி எழாதது ஏன்? அவ்வாறு பொங்கி எழாமல் அவரைக் கட்டுப்படுத்தியது யார்? முழுக்க முழுக்க வன்னியர்களுக்கு எதிராக செயல்பட்டு வரும் ஸ்டாலின் அவர்கள், இப்போது திடீரென தம்மை வன்னியர்களின் தோழன் என்று கூறிக் கொண்டால் அதை நம்பி ஏமாற வன்னியர்கள் ஒன்றும் அப்பாவி திமுக தொண்டர்கள் அல்ல. தேர்தலின் போது கொண்டாடவும், தேர்தல் முடிந்தவுடன் தூக்கி எறிவதற்கு வன்னியர்கள் கறிவேப்பிலையும் அல்ல என்பதை காலமும், மக்கள் தீர்ப்பும் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு உணர்த்தும்.


போராளி : வன்னியர்களை வைத்து ஒவ்வொரு தேர்தலிலும் நீங்கள் நடத்திய வியாபாரத்தை நன்றாக புறிந்து கொண்டுதான் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பட்டை நாமம் போட்டார்கள். உங்கள் வன்னியர் காப்பாளர் நாடகம் இனி எடுபடாது மருத்துவரே! எடுபடாது!
 


ராமதாஸ் : தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தச் செய்வதன் மூலம் வன்னியர்களுக்கான தனி இட ஒதுக்கீட்டை 2021 தேர்தலுக்கு முன்பாகவே வென்றெடுக்கும் சக்தி பா.ம.க.வுக்கு உண்டு. மற்றபடி, 2021 தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்து விடலாம் என்று மு.க.ஸ்டாலின் கனவு கண்டு கொண்டிருந்தால் அவருக்கு நான் கூற விரும்புவது, அவருக்கு மிகவும் பிடித்த, அவரால் பலமுறை கூறப்பட்ட ‘‘சீனி சக்கரை சித்தப்பா... சீட்டில் எழுதி நக்கப்பா’’ என்ற பழமொழியைத் தான்.
 

போராளி : உங்களை சென்ற நாடாளுமன்றத் தேர்தலிலேயே வன்னியர்கள் நன்றாக புறிந்துகொண்டு புறந்தள்ளி விட்டார்கள். தர்மபுரியில் தலை தப்பினால் போதும் என்று ஓட்டம் பிடித்து தந்தையும், மகனும் ஓடிவந்தீர்களே போதாதா? இன்னும் துரத்த வேண்டுமா? இந்த உங்கள் அறிக்கைக்கு எடப்பாடி நல்ல கூலி கொடுப்பார் சென்று வாங்கிக்கொள்ளுங்கள்.
 

 

சார்ந்த செய்திகள்