பாதுகாப்பு குறைபாடு காரணமாக ராகுல் காந்தியின் ஒற்றுமைப் பயணம் நிறுத்தப்பட்டுள்ளது.
காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 7 ஆம் தேதி இந்திய ஒற்றுமைப் பயணத்தை குமரியில் துவங்கினார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து இந்தப் பயணத்தை துவக்கி வைத்தார்.
இந்த ஒற்றுமைப் பயணம் தமிழகம், கேரளா, கர்நாடகம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், மராட்டியம், உத்தரப் பிரதேசம், டெல்லி ஆகிய மாநிலங்களைக் கடந்து தற்போது அதன் இறுதிப் பகுதியான ஜம்மு காஷ்மீரில் நடந்து வருகிறது. ஜம்மு காஷ்மீரில் தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவரும் ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வருமான உமர் அப்துல்லா கலந்துகொண்டு ராகுல் காந்தியுடன் நடைப்பயணம் மேற்கொண்டார்.
இந்நிலையில் தற்போது பாதுகாப்பு குறைபாடு இருப்பதாகக் கூறி இந்திய ஒற்றுமைப் பயணம் நிறுத்தப்பட்டுள்ளது. போதிய பாதுகாப்புகள் வழங்கப்படவில்லை என காங்கிரஸ் மூத்த தலைவர் வேணுகோபால் புகார் கூறியதை அடுத்து ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரை நிறுத்தப்பட்டது. பாதுகாப்பு அதிகரிக்கும் வரை பயணம் நிறுத்தி வைக்கப்படும் என்றும் அவர் கூறினார்.