
அண்ணாமலை அல்ல அந்த ஆண்டவனே வந்தாலும் டெல்டாவில் நிலக்கரி சுரங்கம் அமைக்கும் திட்டத்தை நடத்த முடியாது என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார்.
மதுரை அதிமுக சார்பில் கட்சிக்கு புதிய உறுப்பினர்கள் சேர்க்கும் பணி நடைபெற்றது. இதில் உறுப்பினர் படிவம் வழங்கி முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ நிகழ்வை துவக்கி வைத்தார். தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், “பிரதமர் நரேந்திர மோடி அரசு நிகழ்ச்சிக்காக வந்துள்ளார். கட்சி நிகழ்ச்சிக்காக வரவில்லை. அதிமுகவில் ஒன்றரை கோடி தொண்டர்கள் உள்ளார்கள். இப்போது புதிதாக உறுப்பினர்கள் சேர இருக்கிறார்கள். எடப்பாடி பழனிசாமி தஞ்சை மண்டலத்தை வேளாண் பாதுகாப்பு மண்டலமாக அறிவித்ததினால், விவசாயிகளுக்கு பாதிப்பு தரக்கூடிய திட்டங்கள் செயல்படுத்தக்கூடாது என்பதே அந்த சட்டத்தின் வடிவம். விவசாயிகளுக்கு பாதிப்பு தரக்கூடிய எந்தவகையான தொழிற்சாலையும் அமைக்கக்கூடாது என்பது அந்த சட்டத்தின் வடிவம். எடப்பாடி பழனிசாமி இத்திட்டத்தை கொண்டு வந்ததால் விவசாயிகளின் நன்மைகள் பாதுகாக்கப்பட்டுள்ளது” எனக் கூறினார்.
அண்ணாமலை கேட்டுக்கொண்டதால் டெல்டாவில் நிலக்கரி சுரங்கம் அமைக்கும் திட்டத்தை மத்திய அமைச்சர் திரும்ப பெற்றுக் கொண்டதாக கூறுகிறார் என செய்தியாளர் கேள்வி எழுப்பியதற்கு பதில் அளித்த செல்லூர் ராஜூ, “அண்ணாமலை என்ன அந்த ஆண்டவனே கேட்டாலும் தப்புதான். அதை நடத்த முடியாது. சட்டத்தை மீறி யாரும் செயல்பட முடியாது. திமுக ஆட்சிக்கு வந்து 2 வருடம் ஆகிவிட்டது. மதுரைக்கு இன்னும் ஒரு திட்டம் கூட செயல்படுத்தவில்லை. கலைஞர் பெயரில் நூலகம் ஒன்று தான் வந்துள்ளது” எனக் கூறினார்.