தமிழக காங்கிரஸ் நடத்தும் மாநாட்டில் ராகுல் கலந்து கொள்கிறார் என்று அரசியல் வட்டாரங்களில் கூறிவருகின்றனர். வரும் மார்ச் முதல் வாரம் சென்னைக்கு வரும் அவர், மகாத்மா காந்தியின் 150 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, சத்தியமூர்த்தி பவனில் அமைக்கப்படும் 150 அடி உயர கொடிக் கம்பத்தில் காங்கிரஸ் கொடியை ஏற்றிவைக்க இருக்கிறார் என்ற தகவலும் வந்து கொண்டிருக்கிறது.
இதனையடுத்து ராஜீவ் காந்தி காலத்தில் சென்னை மறைமலை நகரில் நடத்தப்பட்ட காங்கிரஸ் மாநாட்டுக்குப் பிறகு, எந்த பெரிய மாநாடும் தமிழகத்தில் நடத்தப்படாமல் இருப்பதை சுட்டிக் காட்டிய அக்கட்சியின் டெல்லித் தலைமை சில அதிரடி உத்தரவு போட்டதன் அடிப்படையில் தான் இந்த மாநாட்டு ஏற்பாடுகள் தமிழக காங்கிரஸ் தரப்பால் கையில் எடுக்கப்பட்டுள்ளது என்கின்றனர். தமிழ்நாட்டிலும் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தவும், கட்சித் தொண்டர்களுக்கு புத்துணர்ச்சியை ஏற்படுத்தவும், மாநாட்டுக்கு பெரும் கூட்டத்தைக் கூட்டுவதன் மூலம் தங்கள் பலத்தை நிரூபித்து, வரும் சட்ட மன்றத் தேர்தலில் கூட்டணிக் கட்சியான தி.மு.க.விடம் அதிக சீட்டுகளை வாங்கவும் தான் இந்த மாநாட்டை பிரமாண்டமாக நடத்த டெல்லி தலைமை நினைப்பதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.