அவர் நமீதா ரசிகராகக்கூட இருக்கலாம். போதை ஏற்றிக்கொண்டு, தொடர் போதைக்காக பாட்டில்களையும் வாங்கிக்கொண்டு, விருதுநகர் டாஸ்மாக் கடையைவிட்டு வெளியே வந்தவருக்கு, இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. அதுவே, துன்ப அதிர்ச்சியாக மாறும் என்பதை அறியாத நிலையில், படு உற்சாகமாகிவிட்டார்.
முதலில் இன்ப அதிர்ச்சி என்னவென்று பார்ப்போம்; தாமரை வேட்பாளர் பாண்டுரங்கனுக்கு வாக்கு சேகரிப்பதற்காக விருதுநகர் வந்திருந்த நடிகை நமீதா வாகனம், அந்த டாஸ்மாக் கடை பக்கத்திலா நிற்க வேண்டும்? வயது வித்தியாசம் பார்க்காமல் “மச்சான்ஸ்’ என்றழைக்கும் நமீதா, தாமரைக்கு ஓட்டு கேட்டு, அங்கு பிரச்சாரம் செய்துகொண்டிருந்தார். அந்த குடிமகனுக்கு என்ன தோன்றியதோ? மிதமிஞ்சிய போதையில் ரொம்பவும் குஷியாகிவிட்டார். வாகனத்தைச் சுற்றி நிற்கும் வாக்காளர்களிடம் மைக் பிடித்து நமீதா பேசும்போது, வாக்காளரான தானும் பதிலளிப்பதுதானே மரியாதை? என்று அவருடைய மனசாட்சி அநியாயத்துக்கு உந்தித்தள்ள, நமீதாவின் பிரச்சார பேச்சு ஒவ்வொன்றுக்கும் சுடச்சுட பதிலளித்தார்.
“தாமரைக்கு வாக்களியுங்கள். ஆறு சிலிண்டர் தருவோம்..” என்று நமீதா கூற, “அதெல்லாம் முடியாது..” என்று கூச்சலிட்டார் குடிமகன். அவருடைய மறுப்பை காதில் வாங்கிக்கொள்ளாமல் “இல்லத்தரசிகளுக்கு மாதம்தோறும் ரூ.1500 தருவோம்..” என்று நமீதா தொடர்ந்து பேச, “இதுவும் முடியாது..” என்று உரிமைக்குரல் எழுப்பினார் குடிமகன்.
குடிமகனுக்காக காத்திருந்த துன்ப அதிர்ச்சி இனிமேல்தான் வெளிப்பட்டது? ‘அது எப்படி நமீதா மேடம் பேசும்போது, குறுக்கே குறுக்கே பேசலாம். தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற முடியாது என்று நமீதா முகத்துக்கு நேராக மறுத்து சத்தம்போடலாம்?’ என்று கொதிப்படைந்த தாமரைக் கட்சியினர், குடிமகனை அடித்து அப்புறப்படுத்தினர்.
“சென்னை மாகாணத்துக்கு ‘தமிழ்நாடு’ என்று பெயர் சூட்டவேண்டும் என்று, விருதுநகரில் உள்ள தன் வீட்டின் முன்பாக 75 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து, தமிழுக்காக உயிரைவிட்ட சங்கரலிங்கனார் பிறந்த மண்ணில், பிரச்சாரம் என்ற பெயரில் ‘தமிழ்க்கொலை’ அல்லவா செய்திருக்கிறார் நமீதா?” என்று தாக்குதலுக்கு ஆளான குடிமகனுக்கு ஆதரவாகப் பேசினார், விருதுநகர் பள்ளி ஒன்றின் தமிழாசிரியர்.
“தப்புத்தப்பாகவா தமிழில் பேசினார் நமீதா? அப்படி என்னதான் பேசினார்? வணக்கம். மச்சான் சௌக்கியமா? கொஞ்சம் சத்தமா சொல்லுங்க. சௌக்கியமா? எல்லாருக்கும் வணக்கம். ஸ்ரீ பாண்டுரங்கன் அவர்கள் இங்க வீட்ல இருக்ற.. இந்த டவுன்ல இருக்ற அவரு.. பெண்கள் எல்லாம் நல்ல வேலை செஞ்சிட்டு இருக்காங்க. கண்டிப்பா நம்பி அவருக்கு ஓட் கொடுங்க.
தாமரைக்கு எதுக்கு ஓட் கொடுக்கனும்? எனக்கென்ன லாபம்? பாண்டுரங்கனுக்கு எதுக்கு ஓட் கொடுக்கனும்? அதுக்கு பதில் நான் சொல்லப்போறேன். Central government schemes மற்றும் state government schemes. உங்க வீடு தேடி வரும். வருஷத்துக்கு ஆறு gas cylinder, வருஷத்துக்கு ஆறு gas cylinders குடுக்க போறேன். அதுகூட இலவசமா ஒரு வருஷத்துக்கு, அதுக்காக உங்களுக்கு எப்ப வேணும்? உங்க favourite பிரியாணி செஞ்சு சாப்பிடுங்க. சரியா? Vegetarian பிரியாணி செய்யும் போது எனக்கு கூட கூப்பிடுறீங்க. அப்புறம் மாசத்துக்கு ஒரு குடும்பத்துக்கும் தலைவிக்கு, ஆயிரத்தி ஐநூறு ரூபாய் கொடுக்க போறேன். அது கூட இலவசமா ஆயிரத்தி ஐந்நூறு ரூபாயும், மாசத்துக்கு. நன்றி. அதுக்கப்புறம், இடமே இல்லாத வங்களுக்கு, இடமே இல்லாதவங்களுக்கு இடம் கொடுத்து வீடும் கட்டி கொடுக்க போறேன் அது கூட இலவசமா. அது மட்டும் இல்ல.. உங்களுக்கு free வாஷிங் மிஷின் கொடுக்க போறேன். நீங்க கைல துவச்சு கஷ்டப்பட வேணாம். பெண்கள் இல்ல இங்கு? காணோம்..
Hello மச்சான், அங்கே இருக்கு, நமஸ்தே, வணக்கம். வணக்கம், வணக்கம். ஆகா சகோகத்திரி, சகோதரி வாங்க. உங்களுக்கு cable line கூட free. உங்களுக்கு எப்ப வேணும்? உங்க பேவைரைட் serial பாருங்க. உங்க வேணும் அந்த free வீடு, உங்களுக்கு இலவசமா வரும். ஆறு gas cylinders உங்களுக்கு இலவசமா வரும். அப்புறம் உங்களுக்கு free washing machine வரும். சரியா? அப்புறம் cable free.. எல்லாம் உங்களுக்கு free. அதுக்காக தாராளமா, தாமரைக்கு ஓட் குடுங்க.. விருத்தாநகர்ல தாமரை மலரும். தமிழ்நாடு வளரும்.” என்று நமீதா பேசி முடிக்க, ‘பாரத்மாதாகி ஜே!’ என்று கோஷம் எழுப்பி உணர்ச்சிவசப்பட்டார்கள் பா.ஜ.க.வினர்.
விருதுநகர்க்காரரான அசோக் “ரோட்டுக்கு வந்து நமீதா என்ன வேணும்னாலும் பேசுவார். வாக்காளர்கள் பதிலுக்கு பேசக்கூடாதா? வாஷிங் மெஷின்.. வீடெல்லாம் கவர்மெண்ட் தர்ற மாதிரியா பேசினாரு? என்னமோ, சொந்தப் பணத்துல நமீதாவே தர்ற மாதிரில்ல பேசிருக்காரு. இதையெல்லாம் காது கொடுத்து கேட்கணும். நியாயத்த சொன்னா அடி வாங்கணும்கிறது தமிழனோட தலைவிதி.” என்று தலையில் அடித்துக்கொண்டார். தமிழகத்தின் தலைவிதியை மாற்றுவது வாக்காள பெருமக்களின் கையில்தான் இருக்கிறது!