Skip to main content

‘வெற்றியை நோக்கி பிரியங்கா காந்தி...’ - வயநாடு தேர்தல் முடிவு நிலவரம்!

Published on 23/11/2024 | Edited on 23/11/2024
Priyanka Gandhi towards victory Wayanad election result status

மகாராஷ்டிராவில் மொத்தமுள்ள 288 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் கடந்த 20ஆம் தேதி (20.11.2024) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. ஜார்க்கண்டில் மொத்தமுள்ள 81 தொகுதிகளுக்கு  நவம்பர் 13 மற்றும் 20ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக இந்த இரு மாநிலங்களில் பதிவான வாக்குகள் இன்று (23.11.2024) காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன. அதன்படி மகாராஷ்டிராவில் பெரும்பான்மைக்குத் தேவையான இடங்கள் 145 ஆகும். இந்நிலையில் மதியம் 12 மணி நிலவரப்படி பாஜக கூட்டணி 222 இடங்களிலும், காங்கிரஸ் கூட்டணி 54 இடங்களிலும், மற்றவை 12 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன.

ஜார்க்கண்டில் பெரும்பான்மைக்குத் தேவையான இடங்கள் 41 ஆகும். இத்தகைய சூழலில் மதியம் 12 மணி நிலவரப்படி பாஜக கூட்டணி 30 இடங்களிலும், ஜெ.எம்.எம். தலைமையிலான கூட்டணி 50 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன. மற்றவை ஒரு இடத்திலும் முன்னிலை வகிக்கின்றன. அதே சமயம் உத்தரப்பிரதேசம், அசாம், சத்தீஸ்கர், குஜராத், கர்நாடகா, பஞ்சாப் உள்ளிட்ட 14 மாநிலங்களில் நடைபெற்ற 48 சட்டப்பேரவை தொகுதிகளுக்காக நடைபெற்ற இடைத்தேர்தலுக்கான வாக்குகளும் எண்ணப்பட்டு வருகின்றன. மேலும் கேரளாவின் வயநாடு, மகாராஷ்டிராவின் நாந்தேட் ஆகிய மக்களவை தொகுதிகளுக்கு நடந்து முடிந்த இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளும் இன்று எண்ணப்படுகின்றன.

இந்நிலையில் கேரளா மாநிலம் வயநாடு மக்களவை தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்ட அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி சுமார் 3 லட்சத்து 70 ஆயிரம் வாக்குகளைப் பெற்று முன்னிலை வகித்து வருகிறார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் சத்தியனை விட சுமார் 2 லட்சத்து 43 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்று முதலிடத்தில் உள்ளார். சத்யன் ஒரு லட்சத்து 27 ஆயிரம் வாக்குகளைப் பெற்று 2வது இடத்தில் உள்ளார். பாஜகவின் நவ்யா ஹரிதாஸ் 68 ஆயிரம் வாக்குகளை மட்டுமே பெற்று 3வது இடம் வகித்து வருகிறார். 

சார்ந்த செய்திகள்