திமுக கூட்டணி சிறுபான்மை மக்களுக்குப் பாதுகாப்பு அரணாக உள்ளது அதனால் அவர்கள் திமுக கூட்டணிக்கு வாக்களித்து வருகிறார்கள் அது மகிழ்ச்சியான விஷயம்தான் என இஸ்லாமியர்கள் குறித்து சீமானின் கருத்துக்கு திருமாவளவன் பதிலளித்துள்ளார்.
இது தொடர்பாக இன்று திருச்சி விமான நிலையத்தில் பேசிய வி.சி.க தலைவர் திருமாவளவன் எம்.பி., “வேல்முருகன் திமுக கூட்டணியில் நீடிப்பார் என நம்புகிறேன். நீடிக்க வேண்டும் என விரும்புகிறேன். சிதறிக் கிடக்கும் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்க வேண்டும் என்கிற விருப்பத்தை டிடிவி தினகரன் வெளிப்படுத்தி இருக்கிறார். பாஜக தலைமையில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைவார்கள் என்கிற நம்பிக்கை எனக்கு இல்லை. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை அது வெற்றி பெறாது என்பதை தமிழ்நாட்டு மக்கள் ஏற்கனவே உணர்த்தி உள்ளார்கள்.
ஏழை எளிய மக்களைப் பாதிக்காத வகையில் பத்திரப்பதிவு விலை உயர்வு இருக்க வேண்டும். இது குறித்து முழுமையான விவரங்களைத் திரட்டி முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்ல முயற்சிப்பேன். திமுக கூட்டணி சிறுபான்மை மக்களுக்குப் பாதுகாப்பு அரணாக உள்ளது. அதனால் அவர்கள் திமுக கூட்டணிக்கு வாக்களித்து வருகிறார்கள். அது மகிழ்ச்சியான விஷயம்தான். 2019, 2021, 2024 ஆம் ஆண்டு பொதுத் தேர்தல்களில் திமுக கூட்டணி வெற்றி பெறச் சிறுபான்மை வாக்குகள் பெரும் அளவில் உதவியது. அதன் காரணமாகவே சீமான் அவ்வாறு பேசியுள்ளார். அவர் ஆதங்கத்தில் சொன்னால் கூட அவர் உண்மையை தான் கூறி உள்ளார்.
இஸ்லாமியர்கள் வி.சி.க வை பெரிதும் நம்புகிறார்கள், வாக்களித்தும் வருகிறார்கள். உள்ளாட்சித் தேர்தல் விரைவாக நடக்க வேண்டும் என்பதுதான் எங்கள் நிலைப்பாடு அதில் சில வரையறைகள் செய்ய வேண்டி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவற்றை சரி செய்து விரைவாக தேர்தல் நடத்த வேண்டும். தமிழக பள்ளிக்கல்வித்துறைக்கு தேவையான நிதியை ஒன்றிய அரசு ஒதுக்க வேண்டுமானால் புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொள்ள வேண்டும் என மத்திய அமைச்சர் வெளிப்படையாகவே கூறினார். அப்பொழுது பள்ளிக்கல்வித்துறை அமைச்சருடன் நாங்களும் உடன் இருந்தோம்.
புதிய கல்விக் கொள்கையின்படி தமிழ் ஆங்கிலம் ஆகிய இரண்டையும் படியுங்கள் மூன்றாவதாக இந்தியையும் படியுங்கள் என உள்ளது. அதை மத்திய கல்வி அமைச்சரும் வலியுறுத்தினார். அவர் செய்தது நிர்ப்பந்தம் தான். இது குறித்து நாடாளுமன்றத்தில் நாங்கள் சுட்டிக்காட்டி கண்டித்துள்ளோம். அம்பேத்கர் குறித்து, தான் தவறான கருத்துக்களை கூறவில்லை என அமித்ஷா விளக்கம் அளித்துள்ளார். ஆனால் அவர் அம்பேத்கரை கடவுளுடன் ஒப்பிட்டுப் பேசியது என்பது அம்பேத்கரை குறைவாக மதிப்பிடுவதாகத் தான் அமைந்தது.
அம்பேத்கருக்கு எதிராக சாவர்க்கர் பிரச்சாரம் செய்து அம்பேத்கர் தோல்வியடைய சாவர்க்கர் தான் காரணம் என்பதை அம்பேத்கரே கூறியுள்ளார் அதற்கான குறிப்புகளும் உள்ளது. பாஜகவை சார்ந்தவர்கள் தான் உண்மையை திரித்து காங்கிரஸ்தான் அம்பேத்கரை தோல்வி அடையச் செய்தது என பொய்யை பரப்பி வருகிறார்கள். அம்பேத்கருக்கு எதிரான சிந்தனை கொண்டவர்கள் இன்று அம்பேத்கரை செறித்து அவரை இந்துத்துவ அம்பேத்கர் என பரப்புகிறார்கள். அம்பேத்கர் குறித்து இழிவாக பேசிய அமித்க்ஷாவை கண்டித்து வரும் 28ஆம் தேதி அகில இந்திய அளவில் அம்பேத்கர் இயக்கங்கள் ஒன்றிணைந்து போராட்டம் நடத்த உள்ளோம். சென்னையில் விசிக சார்பில் போராட்டம் நடைபெறும். அந்தப் போராட்டத்தில் ஆயிரம் முறை அம்பேத்கர் பெயரை உச்சரித்து போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்.
ஆளுங்கட்சி மீது குறிப்பிட்ட சதவீதம் அதிருப்தி நிலவ தான் செய்யும். தமிழகத்தில் போதைப் பொருள் கலாச்சாரம் பெருகி வருகிறது. அதை அலட்சியப்படுத்த முடியாது. இதை உடனடியாக கட்டுப்படுத்த வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கிறோம். தமிழ்நாட்டில் மதுக்கடைகளை மூட வேண்டும், போதை பொருள் புழக்கத்தை தடுக்க வேண்டும் என முதலமைச்சருக்கு கோரிக்கை வைக்கிறேன். திமுக மீது வி.சி.கவிற்கு எந்த அதிருப்தியும் இல்லை” என்றார்.