மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வரும் 27ஆம் தேதி (27.12.2024) தமிழகம் வருகை தர உள்ளார். இந்த பயணத்தின் ஒரு பகுதியாக 28ஆம் தேதி திருவண்ணாமலை செல்கிறார். அங்குக் கட்டப்பட்டுள்ள திருவண்ணாமலை மாவட்ட பாஜக அலுவலகத்தைத் திறந்து வைக்கிறார். இதனையடுத்து திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சாமி தரிசனம் செய்கிறார். அதனைத் தொடர்ந்து அன்றைய தினமே டெல்லி புறப்பட்டுச் செல்கிறார். அதே சமயம் மத்திய அமைச்சர் அமித்ஷா வருகைக்காக, காவல்துறை தரப்பில் பாதுகாப்புகளை மேற்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் பாஜக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கவும் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் தமிழகம் வரும் மத்திய அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான கு. செல்வப்பெருந்தகை அறிவித்துள்ளார். இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “வரும் 27ஆம் தேதி தமிழ்நாடு வரும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக எனது தலைமையில் கருப்பு கொடி ஆர்ப்பாட்டமும், முற்றுகை போராட்டமும் நடைபெறும். ஜனநாயகத்தின் மீதும், இந்திய அரசியல் அமைப்பின் மீதும் நம்பிக்கை வைத்துள்ள அனைவரும் ஒன்று கூடுவோம்” எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக நடந்து முடிந்த நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் அரசியல் சாசன சட்டம் குறித்துச் சிறப்பு விவாதம் நடைபெற்றது. அந்த விவாதத்தின் முடிவில் அம்பேத்கர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் மத்திய அமித்ஷா பேசியது நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதனையடுத்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, வயநாடு எம்.பி. பிரியங்கா காந்தி, தி.மு.க எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, கனிமொழி உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சியினர், அமித்ஷாவுக்கு கண்டனம் தெரிவித்து நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அம்பேத்கர் சிலை முன்பு போராட்டம் நடத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.