Skip to main content

'ஃபாஸ்ட் டேக்' கட்டண முறை அறிவிப்பாணையை ரத்து செய்யக் கோரிய வழக்கு தள்ளுபடி!

Published on 23/07/2020 | Edited on 23/07/2020
fastag

 

நாடு முழுவதும் உள்ள சுங்கச் சாவடிகளை டிஜிட்டல் மயமாக்கும் நோக்குடன், மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தின் முடிவின்படி,  ஃபாஸ்ட்டேக் முறை அறிமுகப்படுத்தபட்டுள்ளது.  ஃபாஸ்ட்டேக் அடையாள அட்டையைப் பெறாத வாகனங்கள்,  இரு மடங்கு கட்டணத்தைச் செலுத்தினால்தான், சுங்கச்சாவடியைக் கடக்க முடியும் என அறிவிக்கப்பட்டிருந்தது.


இந்நிலையில், ஃபாஸ்ட்டேக் கட்டண முறைக்கான அறிவிப்பாணைகளை ரத்து செய்யக்கோரி, சென்னை தி.நகரைச் சேர்ந்த வழக்கறிஞர் கபிலன் மனோகரன், பொது நல வழக்குத் தொடர்ந்திருந்தார்.


இந்த வழக்கு தலைமை நீதிபதி ஏ.பி. சாஹி அமர்வு முன்பு நடைபெற்றது. அப்போது, ஃபாஸ்ட்டேக் அட்டை பெற்று வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த தனது காருக்கு, ஸ்ரீபெரும்புதூரில் நள்ளிரவில் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்பட்டதாகவும், பாதுகாப்பான, நம்பிக்கையான பணப்பரிமாற்றம் தொடர்பாக, குறுஞ்செய்தி மூலம் ஓ.டி.பி. எண்ணோ, ரகசியக் குறியீட்டு எண்ணோ அனுப்பிய பின்னர்தான் பணப்பரிமாற்றம் செய்ய வேண்டும் என்ற ரிசர்வ் வங்கி விதிகள் மீறப்பட்டுள்ளதாகவும், மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, ஃபாஸ்ட்டேக் கட்டணம் செலுத்தும் முறையில் உள்ள தொழில்நுட்பக் கோளாறுகள் சரி செய்யப்பட வேண்டும் என்று கருத்துத் தெரிவித்த நீதிபதிகள் இந்த வழக்கின் தீர்ப்பைத் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர். 


இந்த நிலையில், இந்த வழக்கில் தீர்ப்பளித்த தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு வழக்கைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர். 

 

 

சார்ந்த செய்திகள்