2025ஆம் ஆண்டிற்கான சர்வதேச கிரிக்கெட் போட்டியின் சாம்பியன்ஸ் டிராபி தொடரானது பாகிஸ்தானில் நடைபெறும் என சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) அறிவித்திருந்தது. முன்னதாக பாகிஸ்தானில் சர்வதேச அளவில் நடைபெற்ற பல்வேறு கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணி விளையாட இருந்த போட்டிகள் இலங்கை மற்றும் துபாய் போன்ற நாடுகளில் நடைபெற்றது. அந்த வகையில் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி விளையாடும் போட்டிகளை இலங்கை மற்றும் துபாயில் நடத்த வேண்டும் எனக் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.
இதன் மூலம் இந்திய அணி பாகிஸ்தானுக்குச் சென்று விளையாடாது எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் 2025ஆம் ஆண்டிற்கான ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டிக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்கும் இந்த போட்டி மார்ச் 9ஆம் தேதி நிறைவடைய உள்ளது. அந்த வகையில் பிப்ரவரி 23ஆம் தேதி இந்திய அணி பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. முன்னதாக பிப்ரவரி 20ஆம் தேதி வங்கதேசத்தையும், மார்ச் 2ஆம் தேதி நியூசிலாந்தையும் இந்திய அணி எதிர்கொள்கிறது. அதே சமயம் இந்தியா விளையாடும் அனைத்துப் போட்டிகளும் துபாயில் நடைபெற உள்ளன.
மேலும் அரையிறுதி போட்டிக்கு இந்திய அணி தகுதி பெறும்பட்சத்தில் அந்த போட்டியும் துபாயில் நடைபெற உள்ளன. அதே சமயம் இந்த தொடரின் இறுதிப் போட்டி லாகூரில் நடைபெறும் ஒருவேளை இறுதிப் போட்டிக்கு இந்திய அணி தகுதி பெறும்பட்சத்தில் அந்த போட்டி துபாய்க்கு மாற்றப்படும் என ஐ.சி.சி. அறிவித்துள்ளது. சுமார் 7 ஆண்டுகளுக்குப் பிறகு அதாவது கடந்த 2017ஆம் ஆண்டுக்குப் பிறகு அடுத்த வருடம் (2025) பாகிஸ்தானில் ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.