தெலுங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களின் தேர்தல் தேதியை நேற்று (9ம் தேதி) தேர்தல் ஆணையம் அறிவித்தது. தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பிருந்தே இந்த ஐந்து மாநிலங்களிலுமே அரசியல் கட்சிகள் தீவிரமாகத் தங்கள் தேர்தல் பணிகளை மேற்கொண்டு வந்தனர். சில இடங்களில் தேர்தல் தேதி அறிவிப்புக்கும் முன்பே தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டனர்.
இந்நிலையில், 5.06 கோடி வாக்காளர்களையும், 230 சட்டப்பேரவைகளையும் கொண்ட மத்தியப் பிரதேச மாநிலத்தில் நவம்பர் 17 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. தேர்தலுக்கான பிரச்சாரத்தை தற்போது அனைத்து அரசியல் கட்சிகளும் இன்னும் தீவிரப்படுத்தியுள்ளன.
அதன்படி காங்கிரஸ் சார்பில் இன்று மத்தியப் பிரதேசம் மாநிலம், ஷாதோல் மாவட்டத்தில் அக்கட்சியின் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் முன்னாள் தலைவரும், எம்.பி.யுமான ராகுல் காந்தி கலந்துகொண்டு பேசினார்.
கூட்டத்தில் அவர் பேசியதாவது; “நாட்டில் ஓ.பி.சி., தலித், பழங்குடியின மக்கள் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையை வெளிச்சத்திற்கு கொண்டுவரும் நோக்கோடு சாதிவாரி கணக்கெடுப்பு என்பது நாட்டிற்கு எக்ஸ்ரே போன்றது. காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மத்தியப் பிரதேசம் மாநிலத்திலும், காங்கிரஸ் ஆட்சி அமைந்தவுடன் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும். ஓ.பி.சி., தலித், பழங்குடியின மக்களின் உரிமைகளை அடையவே இது குறித்து தற்போது பேசப்படுகிறது. நாட்டின் மொத்த பட்ஜெட்டை நிர்வகிக்கும் 90 உயர் நிலை அதிகாரிகளில் வெறும் 3 பேர் மட்டுமே ஓ.பி.சி. பிரிவைச் சேர்ந்தவர்கள். இவர்கள், பட்ஜெட்டில் வெறும் 5% மட்டுமே நிர்வகிக்கிறார்கள்.
இதுபோன்ற உண்மைகள் எல்லாம் வெளிவந்துவிடக்கூடாது என்பதற்காகவே காங்கிரஸ் ஆட்சியில் மேற்கொண்ட சாதிவாரி கணக்கெடுப்பு விவரங்களை பா.ஜ.க. வெளியிட மறுக்கிறது. சாதிவாரி கணக்கெடுப்பு பற்றி வாய் திறக்காத பிரதமர் மோடி, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் குறித்தெல்லாம் பேசுகிறார்” என்றார்.