சென்னையில் முன்னாள் பிரதமர் வி.பி. சிங்கிற்கு சிலை அமைக்கப்படும் என்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்புக்கு வி.பி.சிங் குடும்பத்தார் நன்றி தெரிவித்துள்ளனர்.
இது குறித்துப் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “முன்னாள் பிரதமர் வி.பி. சிங் பிரதமராக இருந்தது 11 மாதங்கள் என்றாலும் அவர் செய்த சாதனைகள் மகத்தானவை. பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு மத்திய அரசுப் பணியிடங்களில் 27% இட ஒதுக்கீட்டை அமல்படுத்தியவர். காவிரி நீருக்காக நடுவர் நீதிமன்றம் அமைத்துக் கொடுத்தவர். வி.பி.சிங் நினைவைப் போற்றும் வகையில் சென்னையில் அவரது முழு உருவக் கம்பீர சிலை அமைக்கப்படும்” எனக் கூறினார். முதலமைச்சரின் இந்த அறிவிப்பிற்கு பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் வரவேற்பு அளித்தனர்.
இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பிற்கு வி.பி.சிங் குடும்பத்தார் நன்றி தெரிவித்துள்ளனர். செய்தியாளர் சந்திப்பில் பேசிய சீதா குமாரி மற்றும் அவரது மகன்கள் அஜய் சிங், அபை சிங் ஆகியோர், நாட்டிலேயே முதன்முறையாக வி.பி.சிங்கிற்கு சிலை அமைக்கப்படுவதாக குறிப்பிட்டனர். முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு மகிழ்ச்சி அளிப்பதாக குறிப்பிட்ட சீதா குமாரி, சென்னையில் அமைக்கப்படும் வி.பி.சிங்கின் சிலையை காண ஆர்வமுடன் இருப்பதாகவும் கூறினார். இதுகுறித்து தமிழ்நாடு முதலமைச்சருக்கு தனது நன்றியையும் தெரிவித்தார். திறப்பு விழா வரை நான் உயிரோடு இருக்க விரும்புகிறேன். திறப்பு விழா குறித்த நிகழ்ச்சி எனக்கு தெரிய வந்தால் அதில் நிச்சயம் பங்கேற்பேன் எனவும் வி.பி.சிங்கின் மனைவி நெகிழ்ச்சியாகக் கூறியுள்ளார்.
அடுத்த முறை சென்னை வரும்போது முதலமைச்சரை சந்தித்து நன்றி தெரிவிக்க இருப்பதாகவும் வி.பி.சிங் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.