தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நிலை தொய்வு காரணமாக ஓய்வெடுத்துவரும் நிலையில், தேமுதிகவின் செயல் தலைவராக அவரது துணைவியார் பிரேமலதா விஜயகாந்த் நியமிக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியிருந்தன.
இந்நிலையில், சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த பிரேமலதா விஜயகாந்த்திடம் இதுகுறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்குப் பதிலளித்த அவர், ''நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் ஏற்கனவே திட்டமிட்டபடி தேமுதிக தனித்துப் போட்டியிடும். பெண்களின் திருமண வயதை 21 ஆக உயர்த்துவது குறித்து நாடு முழுவதும் மக்களிடம் கருத்து கேட்டு பின்னர் அரசாணை வெளியிட வேண்டும். விஜயகாந்த் மீண்டும் திரைப்படங்களில் நடிப்பதாக வெளியாகும் தகவல்கள் தவறானவை. தேர்தல் தேதி அறிவித்தவுடன் யார் யார் எந்தெந்த வார்டில் போட்டியிடுகிறார்கள் என்பதை அதிகாரபூர்வமாக அறிவிப்போம். அண்மையில் நடந்த கூட்டத்தில் செயல் தலைவர் பொறுப்பை ஏற்படுத்த வேண்டுமென்று மாவட்டச் செயலாளர்கள் வலியுறுத்தியிருந்தனர். எனவே தேமுதிகவில் செயல் தலைவர் பொறுப்பை ஏற்படுத்துவது பற்றி பொதுக்குழுவில் கட்சித் தலைவர் விஜயகாந்த் அறிவிப்பார்'' எனத் தெரிவித்தார்.