ஈரோடு இடைத்தேர்தல் சூடு பிடித்துள்ள நிலையில், அதிமுக கட்சி உட்பூசலும் வலுவாக சூடுபிடித்துள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வான திருமகன் ஈ.வெ.ரா. கடந்த 4-ம் தேதி மறைந்தார். இதன் பிறகு இத்தொகுதி காலியான தொகுதியாக அறிவிக்கப்பட்டதோடு, தேர்தல் ஆணையம் பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்றும் அறிவித்துள்ளது.
அ.தி.மு.க.வில் ஈ.பி.எஸ்., ஓ.பி.எஸ். ஒருங்கிணைந்து செயல்படுவதற்கான பேச்சுவார்த்தைக்கு ஓ.பி.எஸ். தயாராக இருந்த சூழ்நிலையில், ஈ.பி.எஸ். முழுமையாக மறுத்துவிட்டாராம். கொங்கு பெல்ட் ஈ.பி.எஸ். அதிமுக வசம் உள்ளதாலும், கொங்கு மக்களின் ஆதரவும் இருப்பதால், இரண்டு அணியாக பிரியும் பட்சத்தில் வேறு சின்னத்தில் நின்றாலும் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று அதிமுக நாங்கள்தான் என மக்கள் மத்தியில் நிலைநிறுத்த இந்த வாய்ப்பை ஈ.பி.எஸ். பயன்படுத்தவும் கணக்கு போட்டிருக்கிறாராம்.
அதிமுக இரட்டை இலை சின்னத்தில் வேட்பாளரை நிறுத்த ஓ.பி.எஸ்.-சின் கையெழுத்தும் தேவைப்படுவதால், எப்படியும் ஈ.பி.எஸ். தரப்பிலிருந்து அழைப்பு வரும் அல்லது அதிமுக நேரடியாகப் போட்டியிடாமல் கூட்டணிக்கு சீட் கொடுக்குமென ஓ.பி.எஸ். தரப்பில் எதிர்பார்த்த நிலையில், ஈ.பி.எஸ். அதிமுக நேரடிப் போட்டி என அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பு வெளியானதும், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் களம் இறங்குவது குறித்து ஓ.பி.எஸ். ஜன. 23-ம் தேதி மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தைக் கூட்ட முடிவு செய்துள்ளார். வரும் ஜன. 23ம் தேதி சென்னை எழும்பூரில் உள்ள தனியார் ஓட்டலில் இந்த மாவட்டச் செயலாளர் கூட்டத்தை கூட்ட ஓ.பி.எஸ். முடிவு செய்துள்ளார். இந்தக் கூட்டம் முடிந்த பிறகு ஓ.பி.எஸ்.-சின் நிலைப்பாடு குறித்து தெரியவரும்.
இரு அணிகளும் ஒன்றிணைந்தால் ஓ.பி.எஸ். தரப்பில் உள்ள மாவட்டச் செயலாளர்களின் பதவிகள் பறிபோகும் வாய்ப்பும் இருக்கிறது. அதன் காரணமாக ஓ.பி.எஸ். அணி தனியாக நிற்கவே அவரின் ஆதரவு மாவட்டச் செயலாளர்கள் முடிவெடுப்பார்கள் என்கின்றனர் அதிமுக அரசியலைத் தொடர்ந்து கவனிப்பவர்கள்.
இந்த சூழ்நிலையில், 23ம் தேதி மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை முடித்துவிட்டு பாஜக தலைமையைச் சந்திக்க ஓ.பி.எஸ். ஒப்புதல் பெற்றுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதன்படி ஓ.பி.எஸ். ஆரம்பத்தில் இருந்து மோடியின் வார்த்தைக்கு ஒத்துப்போன நிலையில், நிச்சயம் ஓ.பி.எஸ். - பாஜக கூட்டணி உருவாகும் என ஓ.பி.எஸ். தரப்பில் பேசப்படுகிறது. ஒன்று பா.ஜ.க. தாமரை சின்னத்தில் நின்றால் அதற்கு ஓ.பி.எஸ். ஆதரவு கொடுப்பார். இல்லையென்றால் ஓ.பி.எஸ். தரப்பு களம் காணும் என்பதே ஓ.பி.எஸ். தரப்பு முடிவாக உள்ளதாம்.