தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது வீட்டில் குடும்பத்துடன் நேற்று பொங்கல் திருநாளைக் கொண்டாடினார். இதன் பின் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “கொரோனாவால் இரண்டு மூன்று வருடங்கள் பொங்கலைக் கொண்டாடாமல் இருந்தார்கள். இந்த வருடம் யாருக்கும் எவ்வித கட்டுப்பாடும் இல்லாமல் அனைவரும் சிறப்பாகப் பொங்கலைக் கொண்டாடுகிறார்கள்.
ஒரே நாடு ஒரே தேர்தல் என்று சொல்லியுள்ளார்கள். நாம் எடுத்தவுடன் அதற்கு பதில் சொல்லிவிட முடியாது. ஏனென்றால் இது மிகப்பெரிய திட்டம். இந்தியாவில் இதுவரை பார்க்காத விஷயம். மற்றவர்களைப் போல் ஒரே வார்த்தையில் ஒரே வரியில் பதில் சொல்லிவிட முடியாது. இது சாத்தியமா என்பதை மத்திய அரசு மக்களுக்கு விளக்க வேண்டும். அப்படி இது சாத்தியம் என்றால் ஓட்டுக்கு காசு கொடுக்கும் கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து ஜனநாயக ரீதியாக நேர்மையான தேர்தல் இந்தியா முழுவதும் நடப்பதை மத்திய அரசும் தேர்தல் ஆணையமும் உறுதி செய்ய வேண்டும்.
இந்த திட்டத்தை ஒட்டுமொத்த மக்களும் வரவேற்கிறார்களா என்பதையும் பார்க்க வேண்டும். எத்தனையோ கட்சிகள் இந்தியா முழுவதும் உள்ளது. அதனால் ஒரே நாடு ஒரே தேர்தல் என்பதை ஒரு வார்த்தையில் சொல்ல முடியாது. இதில் பல விஷயங்கள் இருக்கிறது. நிச்சயமாக மத்திய அரசு முழு விளக்கத்தையும் அரசியல் கட்சிகளுக்கும் மக்களுக்கும் தெரியப்படுத்தி அனைவரின் ஒப்புதலோடுதான் இதனைச் செய்ய முடியும்.
ஆளுநரின் செயல்பாடுகள் இதுவரை இந்திய அரசியலில் நடக்காத விஷயம். எங்களைப் பொறுத்தவரை சட்டசபைக்கே ஒரு கருப்பு தினம். தமிழக அரசியல் வரலாற்றில் இதுபோல் நடந்ததே இல்லை. எதிர்க்கட்சிகள் வேண்டுமானால் வெளிநடப்பு செய்யலாம். ஆளுநரே வெளிநடப்பு செய்தது இதுதான் முதன்முறை. இது கண்டிக்கத்தக்க விஷயம். இதற்கு முன்பே தமிழகமா தமிழ்நாடா என்ற குழப்பம் வந்தது. இப்பொழுது சட்டசபை முடிவதற்கு முன்பே வெளியேறியுள்ளார்” எனக் கூறினார்.