கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாகத் தமிழக சட்டமன்ற கூட்டம் இன்றோடு (24.3.2020) நிறைவு செய்யப்படுகிறது. பட்ஜெட் கூட்டத்தின் தொடர்ச்சியாக அரசின் துறை ரீதியிலான மானியக் கோரிக்கைகளை நிறைவேற்ற மார்ச் 9-ந்தேதி கூடிய சட்டமன்றம், ஏப்ரல் 9 வரை நடப்பதாக முடிவு செய்யப்பட்டிருந்தது. கொரோனா வைரஸ் காரணமாக மார்ச் 31-ந்தேதியோடு முடித்துக்கொள்ளும் வகையில் அதன் நிகழ்ச்சி நிரல்கள் மாற்றியமைக்கப்பட்டன. அதன்படி காலை-மாலை இரு வேளைகளிலும் கூட்டம் நடைபெறும் என அறிவித்திருந்தார் சபாநாயகர் தனபால்.
இந்த நிலையில், கொரோனாவின் தாக்கம் அதிகமாக இருப்பதால் சென்னை உள்ளிட்ட 3 மாவட்டங்களை முடக்க வலியுறுத்தி தமிழக அரசுக்கு பரிந்துரைத்தது மத்திய அரசு. இதனை மையமாக வைத்து சட்டமன்றத்தை ஒத்தி வைக்க திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்தன. இதனைச் சபாநாயகர் ஏற்காததால் கூட்டத்தொடரை எதிர்க்கட்சிகள் புறக்கணித்தன. இந்த நிலையில் 23-ந்தேதி மீண்டும் அலுவல் ஆய்வுக்குழுவைக் கூட்டி விவாதித்த சபாநாயகர் தனபால், கூட்டத்தொடரை இன்றுடன் (24-ந்தேதி) நிறைவு செய்யும் முடிவை எடுத்திருந்தார்.
இதனடிப்படையில் மார்ச் 31-ந்தேதி வரை நடக்கவிருந்த கூட்டத்தொடரில் நிறைவேற்றப்படும் அனைத்து மானியக்கோரிக்கைகளும் இன்று ஒரே சமயத்தில் நிறைவேற்றப்படும். முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் உள்பட 14 அமைச்சர்களிடமுள்ள 22 துறைகளின் மானியக் கோரிக்கைகள் இதில் அடங்கும். அவைகள் நிறைவேற்றப்பட்டு சட்டமன்றத்தை நிறைவு செய்கிறது எடப்பாடி அரசு.