அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.
திமுக பிரமுகரைத் தாக்கி, அரைநிர்வாணமாக அழைத்துச் சென்றது தொடர்பான வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்ட நிலையில் அதற்கு ஜாமீன் பெற்ற அதே நேரத்தில் ஜெயக்குமார் மீது மேலும் ஒரு மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டது. 5 கோடி ரூபாய் மதிப்புள்ள தொழிற்சாலையை அபகரித்தது தொடர்பான புகாரின் பேரில் சென்னை குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதனால் சிறையிலேயே இருக்கும் நிலை ஜெயக்குமாருக்கு ஏற்பட்டது.
8 கிரவுண்டில் உள்ள தொழிற்சாலையை மிரட்டி அபகரித்ததாக மகேஷ் என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மட்டுமில்லாது அவரது மகள் ஜெயப்பிரியா, அவரது கணவர் நவீன் மீதும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று பண மோசடி வழக்கில் திருச்சியில் 2 வாரம் தங்கியிருந்து கண்டோன்மென்ட் காவல்நிலையத்தில் கையெழுத்திட நிபந்தனை விதிக்கப்பட்டு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. அவர் மீது இருந்த 3 வழக்கிலும் அவருக்கு ஜாமீன் கிடைத்துள்ள நிலையில் விரைவில் ஜெயக்குமார் சிறையிலிருந்து வெளிவருவார் என அதிமுக வட்டாரங்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளன.