விசைத்தறிகளுக்கு இலவச மின்சாரத்தை உயர்த்தி வழங்க அரசாணை வெளியிட தேர்தல் ஆணையத்தில் தமிழக அரசு விண்ணப்பித்துள்ளது என்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஈரோட்டில் கூறினார்.
ஈரோடு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு திமுகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் பிரச்சாரத்தை தொடங்கிவிட்டன. தமிழக அமைச்சர்கள் ஈரோடு கிழக்கில் முகாமிட்டு தொடர்ந்து பிரச்சாரம் செய்து வருகின்றனர். இன்று ஈரோடு வீரப்பன் சத்திரம் பகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்த அமைச்சர் செந்தில்பாலாஜி செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், "திமுக தேர்தல் அறிக்கையில் கைத்தறி நெசவாளர்களுக்கு வழங்கும் இலவச மின்சாரத்தை 200 யூனிட்டிலிருந்து 300 ஆகவும், விசைத்தறியாளர்களுக்கு 750லிருந்து 1000 ஆகவும் உயர்த்தி வழங்க உறுதி அளித்தது. தற்போது ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக தேர்தல் விதிகள் அமலாக்கப்பட்டுள்ளன. எனவே இலவச மின்சார உயர்வுக்காக அரசாணை வெளியிட மத்திய தேர்தல் ஆணையத்திடம் தமிழக அரசு விண்ணப்பித்துள்ளது. தேர்தல் முடிந்ததும் தமிழகம் முழுவதும் இலவச மின்சாரம் உயர்த்தி வழங்கப்படும். 2011 இல் அதிமுக ஆட்சிக்கு வந்ததும் மின்கட்டணம் சுமார் 180% வரை உயர்ந்தது. அதை அதிமுக பேசுவதில்லை. திமுக ஆட்சியில் தற்பொழுது 30 சதவீதம் மட்டுமே உயர்த்தப்பட்டுள்ளது.
சென்னை போன்ற பெருநகரங்களில் அடுக்குமாடிக் குடியிருப்புகளில் நீச்சல் குளம், திரையரங்கு போன்றவை உள்ளன. எனவே தான் அதற்கு தனியாக வணிக மின்கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதிமுக ஆட்சியில் மின்வாரியத்திற்கு 1.5 லட்சம் கோடி கடன் சுமை ஏற்பட்டது. அதை சரி கட்டவே தற்போது மின் கட்டணம் உயர்த்தப்பட்டது. அதிமுக ஆட்சியில் மின்மிகை மாநிலம் என்று பேசினார்கள். ஆனால், ஒரு மெகாவாட் கூட கூடுதலாக உற்பத்தி செய்யவில்லை. 2006-2011 கலைஞர் ஆட்சியில் வடசென்னை 3 மின் உற்பத்தி நிலையம் உருவாக்கத் திட்டமிடப்பட்டது. அதைக் கூட அதிமுக ஆட்சி நிறைவேற்றவில்லை. கலைஞர் ஆட்சியில் போடப்பட்ட திட்டங்களால் தான் தமிழகத்தில் மின் உற்பத்தி அதிகரித்தது.
அதிமுக ஆட்சி தனியாரிடமிருந்து அதிக விலைக்கு மின்சாரத்தை கொள்முதல் செய்தது. மின்மிகை மாநிலம் என்றால் அதிமுக ஏன் கடந்த 20 ஆண்டுகளாகக் காத்திருந்த விவசாயிகளுக்கு இலவச மின்சாரத்தை வழங்கவில்லை. தற்போது திமுக ஆட்சிக்கு வந்ததும் ஒன்றரை லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின்சார இணைப்பை வழங்கினோம். அதிமுக ஆட்சியில் மத்திய அரசின் பவர் பைனான்ஸ் கார்ப்பரேஷனிடம் இருந்து அதிக வட்டிக்கு மின்வாரியம் கடன் வாங்கி இருந்தது. அந்த வட்டியை குறைத்துள்ளோம். மின் விநியோகத்தில் மின்சார இழப்பு 17 சதவீதம் உள்ளது. அதை கடந்தாண்டு 0.7 சதவீதம் குறைத்துள்ளோம். ஒரு சதவீதம் குறைத்தால் கூட 560 கோடி ரூபாய் மிச்சப்படுத்தலாம். அதிமுக ஆட்சியில் மின் விநியோகத்தில் அடிப்படைக் கட்டுமான வசதிகள் மேம்படுத்தப்படவில்லை. ஆனால் சட்டமன்றத் தேர்தலுக்கு பதினைந்து நாட்களுக்கு முன்பு விவசாயிகளுக்கு 24 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்குவோம் என அறிவித்தார்கள். நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு 26,000 புதிய டிரான்ஸ்பார்மர்கள் நிறுவப்பட்டுள்ளன. ஸ்மார்ட் மீட்டர் மூலம் மின் கட்டணத்தை நுகர்வோர் தெரிந்து கொள்ள விரைவில் வசதி செய்யப்படும். மின் விநியோகத்தை ஒழுங்குபடுத்த விவசாயிகள் முதல் வீடுகள் வரை அனைத்து நுகர்வோருக்கும் ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தப்படும்.
அதிமுக ஆட்சியில் இதற்காக நடவடிக்கை எடுக்கவில்லை. அதிமுக ஆட்சியில் பல கோடி மதிப்புள்ள நிலக்கரி மின் உற்பத்தி நிலையங்களிடமிருந்து காணாமல் போனது குறித்து லஞ்ச ஒழிப்பு கண்காணிப்பு துறையிடம் புகார் செய்யப்பட்டுள்ளது. விரைவில் விசாரணை அறிக்கை வெளிவரும். அதிமுக ஆட்சியில் நடந்த தவறுகள் குறித்து அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த தங்கமணியுடன் பகிரங்கமாக விவாதம் செய்ய நான் தயார். அவர் தயாரா?. மின் இணைப்பு எண்ணை ஆதாருடன் இணைக்க பிப்ரவரி 15 கடைசி நாளாகும். இது மேலும் நீட்டிக்கப்படாது. இவ்வாறு இணைப்பதால் வீடுகளுக்கு வழங்கும் 100 யூனிட் இலவச மின்சாரம் ரத்து செய்யப்படாது. தமிழகத்தின் தற்போதைய மின் உற்பத்தி திறன் 32,000 மெகாவட்டாகும். இதை அடுத்த பத்தாண்டுகளில் 64,000 என உயர்த்த திட்டமிட்டு பணிகளை துவக்கி உள்ளோம்.
மின் கட்டண உயர்வு பற்றி பேசும் அதிமுக பெட்ரோல், டீசல், கேஸ், நூல் விலை உயர்வு குறித்து மத்திய அரசை கண்டித்து ஏன் போராட்டம் நடத்தவில்லை. ஓபிஎஸ் அணி திமுகவின் பி டீம் என்று இபிஎஸ் அணி கூறுகிறது. அது உண்மை அல்ல. ஆனால் இபிஎஸ் அணி பாஜகவின் பி டீம். அதிமுக ஒன்றுபட்டாலும் இரட்டை இலை சின்னம் கிடைத்தாலும் திமுகதான் இந்த இடைத்தேர்தலில் மகத்தான வெற்றி பெறும். கடந்த சட்டமன்ற மற்றும் உள்ளாட்சி தேர்தலின் போது அதிமுக ஒன்றுபட்டு இரட்டை இலை சின்னத்தில் தான் போட்டியிட்டது. ஆனால் வெற்றி பெற முடியவில்லை. அதேநிலை தான் இப்போதும் ஏற்படும்" என்றார்.